×

தீபாவளிக்கு தயாராகும் இனிப்பு கார வகைகள் காரைக்கால் பலகாரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

காரைக்கால் : தீபாவளி பண்டிகை முன்னிட்டு காரைக்காலில் பலகாரங்கள் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடைகளும், பட்டாசுகளும் முன்வரிசையில் நின்றாலும் இனிப்பு இல்லாத தீபாவளி பண்டிகை எப்போதுமே முழுமை பெறுவதில்லை. 6 வயது முதல் 60 வயது வரை என சிறியோர் முதல் முதியோர் வரை இனிப்புடன் தமிழர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளுக்கு இன்றளவும் இன்றைய இளைஞர்கள் வரை மவுசு குறைந்தபாடில்லை.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் காரைக்காலை சேர்ந்த ராகேஷ் என்பவர் தனது பலகார கடையில் பண்டைய கால தீபாவளி பலகாரங்களை இன்றைய இளைஞர்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறார். மேலும் இவர் தயாரிக்கும் தீபாவளி இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் கடைகளில் தற்போது இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கும் பணி இவரது கடைகளில் மும்முரமாக நடந்து வருகிறது.ஆரம்பத்தில் குடிசை தொழிலாக தொடங்கப்பட்ட இவரது இனிப்பாக கடை ,பின்னர் திருமணங்கள்,வீட்டு விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுப்பவர்களுக்கு பலகாரம் செய்யப்படுகிறது.

தற்போது தீபாவளி பண்டிகைகளுக்காக பலகாரங்கள் செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பலகாரங்களுக்கு தேவையான பொருட்களை கை பக்குவமாக தயார் செய்வதாலும்,ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மறு முறை பயன்படுத்தாததாலும் பலகாரங்கள் எப்போதுமே ருசியுடன் இருக்கும்.இப்பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெட்டுப் போவதும் இல்லை.

இதுகுறித்து கடை உரிமையாளர் ராகேஷ் கூறுகையில் இங்கு பண்டைய கால பலகாரங்களான தேன்குழல் (முறுக்கு), கைமுறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, அதிரசம், கைச்சுற்று முறுக்கு 4 முதல் 9 சுற்று வரை உள்பட 50 வகையான பலகாரங்கள் தயார் செய்யப்படுகிறன.இதுதவிர இந்த வருட தீபாவளிக்கு புது வரவாக பாதாம், முந்திரி கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் அடங்கிய துருக்கி நாட்டின் ருசியில் இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராமத்து பலகார முறுக்கு வைகளான முள்ளு முறுக்கு, பிரண்டை முறுக்கு, கைமுறுக்கு மற்றும் ஓலை பக்கோடா போன்ற பலகாரங்களும் தயார் செய்யப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளான துபாய், குவைத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து என வளைகுடா நாடுகளுக்கும் தமிழர்கள் வாசம் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 75 சதவீதம் தொழில் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இங்கு தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பலகாரங்கள் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது என கூறினார்.

The post தீபாவளிக்கு தயாராகும் இனிப்பு கார வகைகள் காரைக்கால் பலகாரங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Diwali ,Balakaram ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...