புதுடெல்லி : டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த, வாகனங்களின் ஒற்றை – இரட்டை இலக்கு பதிவுவெண்கள் அடிப்படையில் மாற்று தினங்களில் வாகனங்களை இயக்கும் கார் கட்டுப்பாடு திட்டத்தை, வரும் நவம்பர் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில சுற்று சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று அறிவித்தார். முதல் முறையாக கடந்த 2016ம் ஆண்டு டெல்லியில் இந்த கார் கட்டுப்பாடு திட்டத்தை ஆம் அத்மி அரசு அமல்படுத்தியது. இதுவரை நான்கு முறை டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தீபாவளிக்கு பின்னர் அமல்படுத்தப்பட உள்ளது.
இதுபற்றி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
ஒற்றைப்படை – இரட்டைப்படை கார் கட்டுப்பாடு திட்டம் தீபாவளிக்குப் பிறகு டெல்லியில் வரும் நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதன்பின் நவம்பர் 20 ம் தேதிக்குப் பிறகு இந்தத் திட்டத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த கார் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பதிவெண்கள் முறையில் வாகனங்களை இயக்குவது மற்றும் அதில் யார் யாருக்கு விலக்கு அளிக்கப்படும் என்பது போன்ற விவரங்கள் குறித்து விரைவில் போக்குவரத்துத் துறையுடன் கலந்தாலோசித்து தெரிவிக்கப்படும்.இந்த கார் கட்டுப்பாடு திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போது அதன் தாக்கம் குறித்து தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய 2018 ஆய்வில் தலைநகரில் பி எம் 2.5ல் சுமார் 40% மாசுபாட்டுக்கு வாகன புகை உமிழ்வுகள் காரணம் என தெரியவந்தது,”என்றார்.
கார் கட்டுப்பாடு திட்டம் என்பது என்ன?
கார் கட்டுப்பாடு திட்டம் என்பது, கார்களை மாற்று தினங்களில் இயக்குவதாகும். அதாவது, ஒற்றை இலக்க பதிவெண்கள் கொண்ட கார்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க பதிவெண்கள் கொண்ட கார்கள் மாற்று நாளிலும் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும். முதல் முறையாக கடந்த 2016ம் ஆண்டு டெல்லியில் அமல்படுத்தப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளிகள், நீதிபதிகள் மற்றும் குறிப்பிட்ட அந்தஸ்துள்ள உயரதிகாரிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இத்திட்டம் தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஆனால், இத்திட்டத்தினால் எற்பட்ட பலன்கள் குறித்து துறைசார் நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
The post டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த கார் கட்டுப்பாடு திட்டம்.. நவம்பர் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை அமலுக்கு வருகிறது!! appeared first on Dinakaran.