×

உற்பத்தியை துவக்க வலியுறுத்தி ஸ்டெர்லிங் பயோ-டெக் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, நவ.7: ஊட்டி அருகேயுள்ள சாண்டிநல்லா பகுதியில் ஸ்டெர்லிங் பயோ-டெக் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், மாத்திரைகளுக்கு உறையாக பயன்படும் ஜெலோட்டின் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறது எனக்கூறி தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால், இந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதனால், தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

மேலும், தொழிலாளர்களுக்கு குறைந்த அளவிலான ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் ஸ்டெர்லிங் பயோ-டெக் எம்ப்ளாயீஸ் யூனியன் அமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜதுரை, தலைவர் ஆப்ரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

The post உற்பத்தியை துவக்க வலியுறுத்தி ஸ்டெர்லிங் பயோ-டெக் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sterling Bio-Tech ,Ooty ,Chandinalla ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...