×

5 மாநில தேர்தல் தொடங்குகிறது சட்டீஸ்கர், மிசோரமில் இன்று வாக்குப்பதிவு

அய்சால்: மக்களவை தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று முதல் தொடங்குகிறது. சட்டீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்பாக அரை இறுதி ஆட்டமாக சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. முக்கியமான இத்தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 5 மாநில தேர்தலின் ஆரம்பமாக சட்டீஸ்கரில் 20 தொகுதிகளில் முதற்கட்டமாகவும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

சட்டீஸ்கரில் மட்டும் 2 கட்டமாகவும் (2ம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி) மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. நக்சல் அச்சுறுத்தல் உள்ளதால் சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 20 தொகுதிகளில் 5,304 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 12 தொகுதிகளில் உள்ள 600 வாக்குச்சாவடிகள் நக்சல்கள் நடமாட்டமுள்ள பஸ்தார் டிவிசனில் உள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் 60,000 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், 40,000 பேர் துணை ராணுவத்தினர். 20,000 பேர் மாநில போலீசார் ஆவர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிஜாபூர், நாராயண்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள 149 வாக்குச்சாவடி மையங்கள் காவல் நிலையம் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் முகாம்களுக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளன. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே நேரடி போட்டி நிலவும் இம்மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 40 லட்சத்து 78 ஆயிரத்து 681 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் மாலை 3 மணி வரையிலும், பிற பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் நடக்கும்.

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 40 தொகுதிகளில் 1,276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களோடு துணை ராணுவமும் அதிகளவில் களமிறக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் 30 தொகுதிகள் சர்வதேச எல்லையை ஒட்டி வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 8.57 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறி உள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான சோரம் மக்கள் முன்னணி (இசட்பிஎம்) 2ம் இடத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு காங்கிரஸ், பாஜவுடன் முதல் முறையாக ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி களமிறங்கி உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

* குண்டுவெடிப்பு
சட்டீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், அங்குள்ள கன்கர் மாவட்டத்தில் நேற்று ஐஇடி வகை குண்டுவெடித்தது. அந்தகர் தொகுதிக்கு உட்பட்ட ரெககோண்டி வாக்குச்சாவடி மையத்திற்கு தேர்தல் குழுவினர் சென்று கொண்டிருந்த போது இந்த குண்டுவெடித்தது. இதில் 2 தேர்தல் பணியாளர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்கள். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளனர்.

The post 5 மாநில தேர்தல் தொடங்குகிறது சட்டீஸ்கர், மிசோரமில் இன்று வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Mizoram ,Aizawl ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த...