×

சென்னையில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வெளி மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள்: தீயணைப்புத்துறை இணை இயக்குனர் தகவல்

பெரம்பூர்: விபத்தில்லா தீபாவளியை கொண்டாட சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பட்டாசு வெடித்து விபத்தில் சிக்குவதும், பட்டாசு கடைகள் மூலம் விபத்துகள் ஏற்படுவதும் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனைப் போக்க தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்தும், விபத்தில்லா தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பது குறித்தும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு தீயணைப்புத் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பட்டாசு கடைகளை அமைக்கும்போது பல்வேறு விதமான வழிகாட்டி நெறிமுறைகள் தீயணைப்பு துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை முறையாக பின்பற்றினால் விபத்துக்கள் ஏற்படாது என தீயணைப்புத் துறையினர் கூறி வருகின்றனர்.

அதேபோன்று இம்முறையும் சென்னையில் பட்டாசு கடைகளை வைக்க தீயணைப்புத் துறையினர் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் பட்டாசு கடைகளை வைக்க 23 விதமான வழிகாட்டி நெறிமுறைகளை தீயணைப்புத் துறையினர் வகுத்துக் கொடுத்துள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு கடைகளை வைக்க விரும்புபவர்கள் பட்டாசு கடைகளை வைப்பதற்கு முன்பு தீ தடையில்லா சான்று பெற வேண்டும். இதனை உரிய முறையில் தீயணைப்புத்துறை அலுவலர்களை அணுகி பெற வேண்டும்.

மேலும் காவல்துறையின் உரிமமும் பெற வேண்டும். தண்ணீர் வாளி, மணல் வாளிகள் மற்றும் 200 மீட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டி, மணல் மூட்டைகள் மற்றும் தீயணைப்பான்கள் எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பட்டாசு கடைகள் அருகே புகை பிடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வைக்கு படும்படி வைக்க வேண்டும். தரமான மின் ஒயர்கள், மின் இணைப்புகள், மின் சாதனங்களை மட்டுமே பட்டாசு கடைகளில் பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ, கடையின் அருகாமையிலோ சேமித்து வைக்க கூடாது.

மேலும் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் எக்காரணத்தைக் கொண்டும் சமையல் செய்யக்கூடாது. எந்த இடத்தில் வைக்க அனுமதி வழங்கப்படுகிறதோ, அந்த இடத்தில் மட்டுமே பட்டாசு கடைகளை அமைத்து விற்பனை செய்ய வேண்டும். ஓலை மற்றும் கூரையின் கீழ் விற்பனை செய்யக்கூடாது. தரைத்தளம் தவிர மாடிகள் மற்றும் வேறு எங்கும் பட்டாசுகளை சேமித்து வைக்க கூடாது. கடைகளின் அருகே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கக்கூடாது. பட்டாசு கடைகளை மூடும்போது மின் இணைப்புகளை முழுவதுமாக துண்டித்து விட்டு மூட வேண்டும். ஒரு பட்டாசு கடையின் எதிர் திசையில் மற்றொரு பட்டாசு கடை நடத்தக் கூடாது. இரு கடைகளுக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.

திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் பட்டாசு சேமித்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்று 23 விதமான வழிகாட்டி நெறிமுறைகளை தீயணைப்புத்துறையினர் பட்டாசு கடைகளுக்கு வழி வகுத்து கொடுத்துள்ளனர். இதன் மூலம் விபத்திலா தீபாவளியை கொண்டாட தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தினகரனுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்கள் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்களில் இருந்தும் 26 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் பட்டாசு கடைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மெட்ரோ வாட்டர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திடீரென்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக தண்ணீரை தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் 26 வண்டிகள் எந்த இடங்களில் தீ விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் பட்டாசு கடைகள் அதிகம் உள்ளனவோ அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். இது மட்டும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே நாங்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்,’’ என்றார்.

* செயல் விளக்கம்

பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விபத்தில்லா தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறுவர்கள் அதிகமாக பட்டாசுகளை விரும்பி வெடிப்பதால், பள்ளிகளுக்குச் சென்று எவ்வாறு பட்டாசுகளை முறையாக கையாள வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.

* குறும்படம் மூலம் விழிப்புணர்வு

தீயணைப்பு துறை சார்பில், சிறிய குறும்படம் மூலமும் தொலைக்காட்சிகளில் பட்டாசுகளை எவ்வாறு விபத்தின்றி வெடிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் குறைந்து வருகின்றன. இம்முறையும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புத்துறை வீரர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

The post சென்னையில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வெளி மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள்: தீயணைப்புத்துறை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai ,Fire Department ,Perambur ,Joint Director ,
× RELATED தீபாவளி சேமிப்பு சீட்டு கட்டிய பணத்தை...