×

அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு இயற்கை முறையில் சிறந்த சிகிச்சை: எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பஞ்ச முட்டி கஞ்சி மாவு: மருத்துவர்கள் தகவல்


சென்னை: அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு இயற்கை முறையில் சிறந்த சிகிச்சையான பஞ்ச முட்டி கஞ்சி மாவு முறையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். இதனால், நோயாளிகள் விரைவில் குணம் பெறுதாக மருத்துவர்கள் கூறினர்.தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் என்றால் அது சித்த மருத்துவம். இன்று வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மற்றும் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு மனிதனின் உணவு, உடை, பரிணாம வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன. மருத்துவ உலகில் தினமும் புதிய கண்டுபிடிப்புகள் நவீன வாழ்க்கையில் நம்பை எளிதாக கையாளும் நிலை உள்ளது. இருப்பினும், பல ஆராய்ச்சிகள் மூலம் மருத்துவ துறையில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருந்த போதிலும், இன்றளவும் சித்த மருத்துவம் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது.

பொதுமக்களில் பலர் இன்றளவும் சித்தா, ஆயுர்வேதா போன்ற நாட்டின் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை பின்பற்றி வருகின்றனர். அதற்கு உதாரணமாக, மருத்துவ எமர்ஜென்சி காலத்தில் டெங்கு மற்றும் கொரோனா பாதிப்பின் போது சித்த மருந்துகளாகிய நிலவேம்பு குடிநீரும், கபசுரக் குடிநீரும் மக்களை காக்கும் கேடயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது உள்ள காலகட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் உள்பட பெரியவர்கள் வரை புற்றுநோயில் மரணம் அடைவது மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்நிலையில் சித்த மருத்துவத்தில் புற்றுநோய் பற்றிய குறிப்புகள் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர் அகத்தியரால் எழுதப்பட்ட அகத்தியர் இரணநூலில் பலநூறு வகையான புற்றுநோய்கள் உள்ளன என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான மருந்துகளை பிற்காலத்தில் வரும் மனித சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் சித்தர்கள் ஓலைச் சுவடிகளில் முன்பே எழுதி வைத்துள்ளனர். சித்த மருத்துவ ரகசியங்கள் அடங்கிய 1084 அரிய ஓலைச்சுவடிகள் அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு அமைந்துள்ளது. இங்கு அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதில் ஒரு முக்கிய நோயாக பார்க்கப்பட கூடிய புற்றுநோய்களுக்கு சித்தர்களால் கூறப்பட்ட மிகப்பெரிய மருந்துகளான மூலிகை, தாது, உலோக சேர்க்கையால் தயாரிக்கப்படும் பல அரிய மருந்துகளான ரசகெந்தி மெழுகு, இடிவல்லாதி மெழுகு, சன்டமாருத செந்தூரம், கவுரி சிந்தாமணி, சிவனார் அமிர்தம், லிங்க செந்தூரம், மகாவல்லாதி லேகியம் முதலியன அறிஞர் அண்ணா அரசு இந்தியமுறை மருத்துவமனை மருந்து தரமான முறையில் தயார் செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனையில் ஒவ்வொரு புதன்கிழமையும் காலை புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவம் பார்க்கப்படுகிறது. ஆரம்ப நிலை மார்பக புற்று, நாக்கு புற்று, கன்னப்புற்று, நுரையீரல் புற்று, ஆசனப் புற்று, கருப்பை, கழுத்து புற்று முதலிய புற்றுநோய்க்கு மருந்துகளை கொண்டு சித்த மருத்துவம் பார்க்கப்படுகிறது. நவீன மருத்துவத்தில் கீமோதெரபி, ரேடியேசன் தெரபியை தாங்க முடியாத நோயாளிகளும் புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. சித்தர்கள் கூறிய அரிய வகை சித்த மருந்துகளைக் கொண்டு புற்றுநோய்க்கு மருத்துவம் செய்யும் போது புற்றுநோயின் தன்மை, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. புற்றுநோயின் பரவுதல் தடுக்கப்படுகிறது, நோயாளியின் வாழ்க்கை தரம் கூட்டப்படுகிறது. நோயாளியின் துன்பம் குறைக்கப்படுகிறது. புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் மேற்கொள்ளும் நோயாளியிடம் வாழ்நாள் நீட்டிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் சித்த மருத்துவத்தின் மூலமாக புற்றுநோயாளியின் துன்பத்தை குறைத்து வாழ்நாளை நீட்டிப்பு செய்ய முடியும் என்ற நிலையை பொதுமக்கள் உணர்ந்து பயன்பட வேண்டும் என்பதற்காக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் மைதிலி ராஜேந்திரன் தலைமையில் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அறிஞர் அண்ணா அரசு இந்திய முறை மருத்துவமனையில் வழங்கப்படும் புற்றுநோய்க்கான மருத்துவத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் உதவியோடு பெறப்படுகிறது. புற்றுநோய் அதிகமாக காணப்படும் இந்த காலக்கட்டத்தில், தேவைப்பட்டால் நவீன மருத்துவர்களோடு சித்த மருத்துவர்கள் இணைந்து செயல்படுத்தப்படும்.

புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதினால் நோயாளியின் நோய் எதிர்பாற்றலை சித்த மருந்துகள் அதிகரிப்பதோடு, புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ செலவு மற்ற மருத்துவத்தை விட குறைந்த அளவே ஆகிறது. அறிஞர் அண்ணா அரசு இந்தியமுறை மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு 15 நாட்கள் தேவைப்படும் சித்த மருந்துகளோடு நோயாளியின் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கூடிய பஞ்ச முட்டி கஞ்சி மாவு வழங்கப்படுகிறது. உணவு முறை பற்றிய பரிந்துரைகளும், புற்றுநோயாளிகள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள உளவியல் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு தங்கு தடையில்லாமல் அறிஞர் அண்ணா அரசு இந்தியமுறை மருத்துவமனை புற்றுநோய் பிரிவிற்கு உயரிய சித்த மருந்துகளை வழங்கி வருவதால் பல நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகள் சித்த மருத்துவத்தால் பயனடைந்து, புற்றுநோயின் வன்மை குறைந்து தன்னம்பிக்கையுடன் வாழ்கின்றனர். இதுகுறித்து அரசு சித்த மருத்துவர் வெண்தாமரை செல்வி கூறியதாவது: தற்போது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புதன்கிழமை புற்றுநோய்க்கு என்று சிறப்பு சிகிச்சை பார்க்கப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை தோல் நோய்க்கான சிகிச்சையும், செவ்வாய்க்கிழமை நீரிழிவு நோய், வியாழக்கிழமை உயர் ரத்த அழுத்தத்திற்கான மருத்துவம் பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதுகு தண்டுவட பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் சனிக்கிழமை குழந்தையின்மை சிகிச்சை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கு இயற்கை முறையில் சிறந்த சிகிச்சை: எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பஞ்ச முட்டி கஞ்சி மாவு: மருத்துவர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Arijarna Anna Siddha Hospital ,Chennai ,Arijar Anna Siddha Hospital ,Arijar Anna Sidda Hospital ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...