×

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து பசுமை தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14பேர் உயிரிழந்தனர். அதேப்போன்று பலர் காயமடைந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதே போன்று பிரதமர் நரேந்திர மோடி தரப்பிலும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது.

இதுபோன்ற நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், ‘‘பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், அதே போன்று காயமடைந்தவர்களுக்கு ரூ.10லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் பட்டாசு குடோன் உரிமையாளரிடம் இருந்து மாநில அரசு மேற்கண்ட தொகையை வசூலித்துக் கொள்ளலாம். அதில் தீர்ப்பாயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது’’ என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘பட்டாசு ஆலைவை விபத்து விவகாரத்தில் மாநில அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.

ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் நலனை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதில் தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. அதனால் இந்த விவகாரத்தில் தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக நவம்பர் மாத இறுதிக்குள் தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பதிலளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து பசுமை தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Firecrackers ,Supreme Court ,Green Tribunal ,Chennai ,Tamil Nadu government ,National South ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...