×

முதல்வர் கூறியது சரிதான் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கைதான்: சீமான் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர் சமூகத்தினர் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜரானார். பின்னர் சீமான் அளித்த பேட்டியில், ‘பாஜ ஆளும் மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை சோதனை செய்கிறார்கள். ஆளாத மாநிலங்களால் ஆளுங்கட்சிகளை சோதனை செய்கிறார்கள். இப்போது திமுகவை குறிவைத்து சோதனை செய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லை என்று கூற முடியுமா?.

வருகிற ஜனவரி மாதம் தேர்தல் அறிவிப்பு வரும் நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டு இப்போது ஏன் சோதனை நடத்த வேண்டும். திமுகவை சேர்ந்த ஜெகத்ரட்சகன், அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் திடீரென்று பணக்காரர்கள் ஆகவில்லை. தேர்தல் வரும்போது இதுபோன்ற ரெய்டு நடத்துவது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் கருதப்படும். இந்த சோதனைகளில் எந்த நேர்மையும் இல்லை. உண்மையும் இல்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து பாஜ அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி பார்க்கின்றனர் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது சரிதான். இலங்கையில் மலையக தமிழர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதல்வரின் காணொலி பதிவு ஒளிபரப்பப்படாதது ஜனநாயக விரோதம் ஆகும்’ என்றார்.

The post முதல்வர் கூறியது சரிதான் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கைதான்: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Seeman ,Erode ,Erode East ,Arundhatiyar ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...