×

வடசென்னை தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு: பைக்குகளில் ஊர்வலமாக சென்றனர்

பெரம்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடசென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், கொளத்தூர் பெரியார் நகர் விளையாட்டு திடலில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீபாவளி பண்டிகையை எவ்வாறு பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, வடசென்னை தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் சூரிய பிரகாஷ், முருகன், கொளத்தூர் நிலைய அலுவலர் ரமேஷ், செம்பியம் நிலைய அலுவலர் பரமேஸ்வரன், சத்தியமூர்த்தி நகர் நிலையை அலுவலர் தங்கராஜ், வியாசர்பாடி நிலைய அலுவலர் எட்வின் உட்பட 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் எவ்வாறு பட்டாசுகளை வெடிக்க வேண்டும், எவ்வாறு பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் பட்டாசு வெடிக்கும்போது எது போன்ற ஆடைகளை உடுத்த வேண்டும், கண்களையும் உடலையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முடிவில், பெரியார் நகர் மாநகராட்சி விளையாட்டு திடலில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் பெரியார் நகர், ஜவகர் நகர், எஸ்ஆர்பி காலனி, ஜெகநாதன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கொளத்தூர் பகுதிச் செயலாளர் ஐசிஎப் முரளி, மாமன்ற உறுப்பினர் அமுதா, இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வடசென்னை தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பாதுகாப்பான தீபாவளி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு: பைக்குகளில் ஊர்வலமாக சென்றனர் appeared first on Dinakaran.

Tags : North Chennai Fire and Rescue Department ,Diwali ,Perambur ,Kolathur Periyar Nagar Sports ,
× RELATED வங்கியிலிருந்து ரிவார்டு...