×

ரூ.1.17 கோடியில் கூடுதல் உணவுக்கூடம் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்பு: பயிற்சி துறை தலைவர் விக்ரம் கபூர் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.1.17 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் உணவுக்கூடத்தை திறந்து வைத்து, முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை பயிற்சித் துறைத் தலைவர் விக்ரம் கபூர் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தி 325 ஆர்வலர்கள் (225 முழுநேர மற்றும் 100 பகுதிநேர ஆர்வலர்கள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களுக்கு முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள மூன்று மாதங்களுக்கு (ஜூலை முதல் செப்டம்பர் வரை) தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. முதன்மைத் தேர்வு பயிலும் ஆர்வலர்களுக்கு மாதம் ரூ.3000 வருமான உச்சவரம்பைப் பொருட்படுத்தாமல் படிக்க தேவையான புத்தகங்களை வாங்குவதற்கு வழங்கப்படுகிறது. அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் ஜனவரி மாதத்தில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆர்வலர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வை நடத்துகிறது. ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக மற்றும் இதர பயண செலவுகளுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது.

குடிமைப் பணித் தேர்வு எழுதும் ஆர்வலர்களின் நலனுக்காக யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. யூடியூப் சேனல் இதுவரை 97,800 சந்தாதாரர்களை கொண்டுள்ளது மற்றும் இதுவரை 31,77,798 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் மின்னணு புத்தகங்களை ஒரே நேரத்தில் 100 ஆர்வலர்கள் படிக்க ஏதுவாக வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 7,500-க்கு அதிகமான நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் அடங்கிய MAGZTER சந்தா செலுத்தப்பட்டு அனைத்து ஆர்வலர்களும் பயன்படுத்த வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மை துறை மூலம் ரூ.1,17,96,383 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது நிரந்தர கூடுதல் உணவுக்கூடம், மற்றும் இதர பணிகள் நடைபெற்றது. தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட கூடுதல் உணவுக்கூடத்தினை கூடுதல் தலைமைச் செயலாளர், பயிற்சித்துறைத்தலைவர் விக்ரம் கபூர் திறந்து வைத்து 2024 முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை நேற்று தொடங்கி வைத்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ரூ.1.17 கோடியில் கூடுதல் உணவுக்கூடம் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்பு: பயிற்சி துறை தலைவர் விக்ரம் கபூர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Vikram Kapur ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...