×

தமிழகத்தில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் வாரிய பணிகள் குறித்த ஆய்வு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 15,000 புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 30 திட்டப்பகுதிகளில் 7582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1627.88 கோடியில் 9,522 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டது. இதில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330.43 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 திட்டப்பகுதிகளில் 297.45 கோடி மதிப்பீட்டில் 1,798 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் 6,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.950 கோடியில் திட்டமிடப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் திட்டப்பகுதியில் ரூ.149.32 கோடியில் 969 குடியிருப்புகளும், சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.23 கோடியில் 900 குடியிருப்புகளும், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார் பகுதி திட்டப்பகுதியில் ரூ.139.80 கோடியில் 876 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட திட்டப்பகுதிகள் அடுத்த மூன்று மாதங்களில் முடித்து ஏழை எளிய மக்களுக்கு விரைந்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியிருப்புதாரர்கள் தாங்கள் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொகையினை செலுத்த வலியுறுத்தி மனை மற்றும் குடியிருப்பிற்கான கிரய பத்திரங்களை அதிகாரிகள் வழங்க வேண்டும். வாரிய திட்டப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் திறன் மேம்பாட்டினை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தாட்கோ மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த 2 வருடங்களில் 4988 பேருக்கு இலகுரக வாகன ஓட்டுநர், அழகுக்கலை, ஆட்டோ ஓட்டுநர், துரித உணவு தயாரித்தல், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுதுபார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

The post தமிழகத்தில் 21 திட்டப்பகுதிகளில் ரூ.1,330 கோடியில் 7,724 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Thamo Anparasan ,Chennai ,Minister ,Micro, Small and Medium Enterprises Department of Tamilnadu ,Urban Habitat ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...