×

தமிழகம் முழுவதும் 4வது நாளாக நீடித்த சோதனை காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.800 கோடி ரசீதுகள் கண்டுபிடிப்பு: ஆவணங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை

சென்னை: பிரபல கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் நிறுவனத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.600 கோடி ரசீதுகள், ரூ.4 கோடி ரொக்கம் மற்றும் அப்பாசாமி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து 4வது நாளாக நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி மதிப்பிலான ரசீதுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலை, கரூர், கோவை, சென்னை பகுதிகளில் உள்ள வீடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ கல்லூரி, உறவினர்கள் வீடுகளில் கடந்த 3ம் தேதி அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக நேற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.

அதேபோல், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனமான ‘காசா கிரண்ட்’ அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்களுக்கு மார்பிள் கற்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் மொத்தமாக வழங்கும் நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது. விழுப்புரத்தில் கட்டுமான நிறுவனங்களுக்கு மார்பிள் மற்றும் கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்யும் தொழிலதிபர் பிரதாப் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் இரவு சோதனை முடிந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதேநேரம், அபிராமி ராமநாதன் பெரிய அளவில் தனது இடத்தில் கட்டுமானம் கட்டி வருகிறார். அந்த இடத்திற்கான கட்டுமான பணியை அப்பாசாமி ரியல் எஸ்டேட் குழுமம் செய்து வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் அபிராமி ராமநாதன் தரப்பில் இருந்து அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் கணக்கு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், அபிராமி ராமநாதன் தரப்பு முறையாக வருமான வரி கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 நாட்களாக அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள அலுவலகம், வீடுகளில் நடந்து வந்த சோதனை நேற்று காலையுடன் முடிவடைந்தது. அந்த வகையில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடந்து வரும் சோதனையில் ரூ.200 கோடி மதிப்பிலான ரசீதுகள் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல் ரகசியமாக பராமரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் ரூ.600 க்கும் கணக்கில் கட்டாத ரசீதுகளை ரகசியமாக பராமரித்து வந்தும் வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே சோதனையில் காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் அகிய 2 நிறுவனங்களில் இருந்து மொத்தம் கணக்கில் வராத ரூ.800 கோடிக்கான ரசீதுகள் மற்றும் ரூ.4 கோடி ரொக்கத்திற்கான கணக்குகளை உரிமையாளர்கள் மற்றும் அந்நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் சோதனை முடிவுக்கு பிறகு தான், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் எத்தனை கோடி பணம் சிக்கியது, ஒன்றிய அரசுக்கு எவ்வளவு வரிஏய்ப்பு செய்யப்பட்டது என தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தருப்பில் தெரிவித்துள்ளனர்.

The post தமிழகம் முழுவதும் 4வது நாளாக நீடித்த சோதனை காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.800 கோடி ரசீதுகள் கண்டுபிடிப்பு: ஆவணங்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Casa Grand ,Abbasamy ,Chennai ,Casa Grant ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...