×

விம்கோ நகரில் தொழில்நுட்ப கோளாறு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு

சென்னை: சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்வே திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 2ம் கட்டமாக 116.1 கி.மீ. தூரத்தில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளை 2025ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் பச்சை நிற வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக நீலநிற வழித்தடமாக உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் 85 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இந்நிலையில், நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை 11.20 மணியளவில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டோல்கேட் மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்ட ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப்பாதையில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறியதாவது: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து டோல்கேட் மெட்ரோ ரயில் நிலையம் வரை 9 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப்பாதையில் இயக்கப்படுகிறது. இதனிடையே டோல்கேட் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஏ.ஜி, டி.எம்.எஸ்., நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேல்நிலை மின்சார உபகரணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரிசெய்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டதால் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

The post விம்கோ நகரில் தொழில்நுட்ப கோளாறு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vimco Nagar ,CHENNAI ,Vimco ,Nagar ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு