×

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் பனப்பாக்கம் பகுதியில் நேற்று காலை சாலையை சீரமைக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியேறியுள்ளனர்.

மேலும், வட்டம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பனப்பாக்கம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக படப்பை வழியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல, வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை ஒட்டியுள்ள பனப்பாக்கம் இணைப்பு சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, வண்டலூர்-வாலாஜாபாத் சாலை மற்றும் பனப்பாக்கம் இணைப்பு சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பின்றி சேதமாகி குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

தற்போது, பெய்து வரும் மழை காரணமாக இச்சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சென்று வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையை ஒட்டிய பனப்பாக்கம் இணைப்பு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை மற்றும் ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

இந்நிலையில், சாலையை சீரமைப்பதில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, நேற்று காலை வண்டலூர்-வாலாஜாபாத் மற்றும் பனப்பாக்கம் இணைப்பு சாலையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அப்பகுதி சாலையை உடனடியாக சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Vandalur-Walajabad ,Serappananchery panchayat ,Panappakkam ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்