×

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, தனது கணவர் மீது டிஜிபியிடம் புகார்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, தனது கணவர் மீது டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி போக்குவரத்துதுறை அமைச்சர் சந்திரபிரியங்கா செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் பதவியை பறித்தார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரபிரியங்கா எம்எல்ஏவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 6 மாதகாலமாக கணவர் சண்முகத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அமைச்சர் பதவி பறிப்பால் கணவர் சண்முகம் மகிழ்ச்சியில் உள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அரசால் சந்திரபிரியங்காவுக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து தனது பொருட்களை எடுக்க சென்ற சண்முகத்தை பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சண்முகம் காரைக்கால் திரும்பினார். தொடர்ந்து கணவன், மனைவி இடையே நிலவி வந்த குடும்பபிரச்னை மோதலாக மாறியுள்ளது. இதற்கிடையே சந்திரபிரியங்கா டிஜிபி ஸ்ரீநிவாசனை சந்தித்தார்.

அப்போது தனது கணவர் சண்முகம், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரித்து அறிக்கை தருமாறு, காரைக்கால் சீனியர் எஸ்பி கவுகால் நிதினுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது சீனியர் எஸ்பிவிடுப்பில் சென்றுள்ளார். இதற்கிடையே 5 நாட்கள் கழித்து விசாரணைக்கு வருமாறு சண்முகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காரைக்காலில் உள்ள சந்திரபிரியங்காவை தொடர்பு கொண்டு கேட்ட போது, எனக்கு கொலை மிரட்டல் அதிகம் உள்ளது. எனக்கு எதிராக சதி வேலை நடக்கிறது. எனவே இது தொடர்பாக சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்து உள்ளேன் என்றார். சண்முகம் தரப்பில் விசாரித்த போது, சந்திரபிரியங்கா கொடுத்திருப்பது பொய் புகார். குடும்ப பிரச்சினை இருப்பது எல்லோருக்கும் தெரியும். இப்பிரச்னையில் சண்முகத்தின் மீது அடுத்தடுத்து புகார் கொடுத்து தொல்லை கொடுப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா, தனது கணவர் மீது டிஜிபியிடம் புகார்! appeared first on Dinakaran.

Tags : Former minister ,Puducherry ,Chandra Priyanka ,DGP ,Former ,minister ,Puducherry Transport Department ,
× RELATED பாஜக ஆட்சியை அகற்ற மக்கள்...