×

லண்டன் ஃபேஷன் வீக்கில் மேடை ஏறிய ‘புரிசை’ கலெக்‌ஷன்!

நன்றி குங்குமம் தோழி

சஸ்டெயினபில் டிசைனர் வினோ சுப்ரஜா

‘‘பிளாஸ்டிக், மருத்துவமனை, தொழிற்சாலைக் கழிவுகள் என பல காரணங்களால் பூமி மாசடைகிறது. அதை தடுக்க பலவிதமான விழிப்புணர்வு செயல்கள் கடை
பிடிக்கப்படுகிறது. ஆனால், நம் யாருக்கும் தெரியாத ஒன்று, நாம் அணியும் உடைகளும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது என்பதுதான். உடைகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பா? ஆச்சரியம் என்றாலும் அதுதான் உண்மை’’ என்கிறார் துபாயில் வசித்து வரும் வினோ சுப்ரஜா.

ஆர்கிடெக்சர் படித்துவிட்டு, ஊடகத்தில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்துள்ளார். தற்போது ஃபேஷன் துறையில் தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தியுள்ளார். இவர் வடிவமைத்த உடைகள் ஷாங்காய் ஃபேஷன் வீக், லண்டன் ஃபேஷன் வீக் போன்ற மேடைகளை அலங்கரித்துள்ளன. நாம் அணியும் உடையால் ஏற்படும் மாசினை தடுக்க இவர் ஏந்தி இருக்கும் ஆயுதம்தான் சஸ்டெயினபில் ஃபேஷன். அதாவது, பருத்திக் கொண்டுதான் தன் உடைகளை தயாரிக்கிறார். மேலும் அவசியம் என்றால் மட்டுமே உடையினை வாங்குங்கள் என்ற விழிப்புணர்வினை தன் உடைகள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறார்.

‘‘நான் வந்தவாசி பொண்ணு. ஆர்கிடெக்சர் படிக்க சென்னைக்கு வந்தேன். அதன் பிறகு எனக்கு தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைச்சது. அது மட்டுமில்லாமல் எஃப்.எம்மிலும் ரேடியோ ஜாக்கியாகவும் இருந்திருக்கேன். திருமணத்திற்கு பிறகு, என் கணவரின் வேலை காரணமாக சீனாவிற்கு செல்ல நேரிட்டது. இங்கு பம்பரம் போல் சுழன்று கொண்டு இருந்த எனக்கு அங்கு கண்களை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஊரு புதுசு, பாஷை தெரியாது, பழகாத சாப்பாடு, அங்குள்ளவர்

களின் பெயர்களை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியல. எல்லாவற்றையும் விட என் விசாவிற்கு அங்க வேலையும் செய்ய முடியாது. நான் சும்மா இருக்க பிடிக்காமல், படிக்க முடிவு செய்து இணையத்தை தேடினால், எல்லாம் சீன மொழியில் இருந்தது. அதில் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஃபேஷன் ஸ்கூல் குறித்து மட்டும்தான் ஆங்கிலத்தில் இருந்தது. ஆர்கிடெக்சர் படிச்சு இருந்ததால், ஃபேஷன் டெக்னாலஜி சரியா வரும்னு அதில் சேர்ந்தேன். இப்படித்தான் நான் ஃபேஷன் துறைக்குள் வந்தேன்.

ஆர்கிடெக்சர் மாதிரி பேனா, பென்சில், ஸ்கேல் கொண்டு வரைவது, துணிகளை தைக்க வேண்டி இருந்தது. என்னால ஒரு நேர்க்கோடு கூட சரியா தைக்க முடியல. ஃபேஷன் குறித்த அடிப்படை விஷயம் எனக்கு தெரியாது. நான் இந்த டிகிரி படிக்க வந்த போது எனக்கு வயசு 30, ஆறு வயதில் ஒரு குழந்தை. என்னால் முடியுமான்னு ஒரு பயம் வர, என் கணவரிடம் நான் இந்த துறையை தேர்வு செய்து தப்பான முடிவு எடுத்திட்டேன்னு அழுதேன்.

சித்திரமும் கைப்பழக்கம் அதனால நீ பழகப் பழக அந்த துறையும் உனக்கு தெரியவரும்னு எனக்கு தைரியம் கொடுத்தார். அதன் பிறகு ஃபேஷன் பற்றி தேட ஆரம்பிச்சேன். அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டேன். அந்த தேடல் தான் இறுதியாண்டு படிக்கும் போது, நான் உருவாக்கிய டிசைன் அங்கு நடைபெறும் ஷாங்காய் ஃபேஷன் வீக்கில் இடம் பெற்றது மட்டுமில்லாமல் அதற்காக எனக்கு இரண்டு சர்வதேச விருதும் கிடைச்சது. இந்தியாவின் இளம் ஃபேஷன் டிசைனர் என்று எனக்கான அங்கீகாரம் கிடைச்சது’’ என்றவரின் அடுத்த பயணம் அமெரிக்காவை நோக்கி நகர்ந்தது.

‘‘எல்லாம் நல்ல படியா போயிட்டு இருந்தபோது, என்னுடைய நேரம் என்னை அமெரிக்காவில் தூக்கி போட்டது. அமெரிக்காவின் ஃபேஷன் ஹப் நியூயார்க், லாஸ் ஏஞ்சல். ஆனால் நான் போனது டெட்ரியாட். அங்கிருந்த பாழடைந்த கட்டிடங்களை பார்க்கும் போது வாழ்ந்து கெட்ட ஊரு போல இருந்தது. இங்க என்ன பண்ணப்போறோம்னு யோசித்தேன். இங்கு ஃபேஷன் குறித்து எதுவுமே இல்லை. அதனால் அதை நான் முதலில் செயல்படுத்த ஆரம்பித்தேன்.

தையல் மெஷின் வாங்கினேன். என்னுடைய கலெக்‌ஷனை போட்டோ எடுத்து ஃபேஷன் உலகில் பதிவு செய்தேன். அதைப் பார்த்து எனக்கு நியூயார்க் ஃபேஷன் வீக்கில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைச்சது. அடுத்து துபாய்க்கு பயணமானோம். இங்கு மார்க்கெட் ரொம்பவே வித்தியாசமானது. அமெரிக்காவில் இன்ஸ்டாவில் நாம் பதிவு செய்தால் போதும், அவங்க நம்மை தேடி வருவாங்க. இங்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மக்கள் தொடர்பு நிறுவனம் மூலமாதான் அணுக முடியும்.

அதனால், ஃபேஷன் மார்க்கெட்டிங் குறித்து படிச்சேன். அங்க மாசுக்கேடு பற்றிய வகுப்பில், ஃபேஷன் துறையினால் ஏற்படும் மாசுக்கேடு பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியானேன். அது என்னை ரொம்பவே பாதிச்சது. 10 வருஷமா இந்த துறையில் இருக்கேன். அதன் மறுபக்கம் தெரியலைன்னு யோசிச்சேன். என்ன டிரஸ், எந்த பிரபலம் போட்டா நல்லா இருக்கும்னு யோசிச்சு இருக்கேனே தவிர இந்த பூமியை எவ்வளவு கெடுத்திருக்கோம்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல. என் அப்பா டாக்டர் என்றாலும் அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. காலையில் விவசாயம் பார்த்த பிறகுதான் கிளினிக் போவார். அவருடைய மகள் நான் என்ன செய்கிறேன்னு யோசித்தேன். அப்ப எடுத்த முடிவுதான் இந்த சஸ்டெயினபில் ஃபேஷன்’’ என்றவர் தன் பிராண்டினை முதலில் ஆன்லைனில்தான் விற்பனை செய்துள்ளார்.

‘‘தெரிஞ்சோ தெரியாமலோ நம் வாழ்க்கையில் பிளாஸ்டிக் ஒரு அங்கமா மாறிடுச்சு. துணியிலும் பாலியஸ்டர் கண்டுபிடிச்சிட்டோம். இதில் இருந்து திரும்பி போவது கடினம். அப்போது பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்து அதன் மூலம் துணியை அமைப்பது பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. இந்த துணிக்கான டிமாண்ட் அதிகரிக்க… அதற்காகவே பெட் பாட்டில்களை தயாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுவும் நமக்கு ஒத்து வராதுன்னு முடிவு செய்து, என் கவனத்தை முழுக்க முழுக்க ஆர்கானிக் காட்டன் உடைகள் பக்கம் திருப்பினேன்.

என் பிராண்டினை டிசைன் செய்ய நெசவாளர்களை தேடிப்பிடித்தேன். என்னுடைய இந்த பிராண்டில் வெளியாகும் ஒவ்வொரு உடையும் ஒரு கதை சொல்லும். நான் கேட்ட கதைகள், பார்த்த இடங்கள், நம்முடைய கலாச்சாரங்கள் என் உடையில் பிரதிபலித்தன. அவை உலகளாவிய மேடையில் என் மண்ணின் கதைகளாக அரங்கேறின. கதையை ஓவியம் மூலமாகத்தான் சொல்ல முடியுமா? உடைகளிலும் சொல்லலாம். அப்படித்தான் ப்ரூக்லின் ஃபேஷன் வீக்கில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை உடையில் பிரதிபலித்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள், இடங்கள் மற்றும் அவை எவ்வாறு மீட்கப்பட்டன என்பதை என் உடையில் பிரின்ட் செய்தேன். அதற்கு ‘பாயன்சி’ என்று பெயர் சூட்டினேன்’’ என்றவர் லண்டன் ஃபேஷன் வீக்கில் தெருக்கூத்து குறித்து உருவாக்கிய ‘புரிசை’ டிசைன் குறித்து பேசினார்.

‘‘நான் தெருக்கூத்து பார்த்துதான் வளர்ந்தேன். குறிப்பா புரிசை கண்ணப்ப தம்பிரான் அவர்களின் தெருக்கூத்து. அந்தக் கலையை நான் சர்வதேச அளவில் கொண்டு போக நினைச்சேன். ஒவ்வொரு ஃபேஷன் வீக்கிலும் என்னுடைய கலேக்‌ஷன் என்ன என்று என்னால் விளக்கம் கொடுக்க முடிந்தது. ஆனால் இதில் அப்படி விளக்கம் எல்லாம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அந்த கலை பற்றி தெரியாமல் நான் என்ன டிசைன் செய்திருக்கேன்னு யாருக்குமே புரியாது.

அதனால அந்தக் கலையை நான் மேடையில் அரங்கேற்ற விரும்பினேன். அதற்காக ஒரு நிமிடம் நடித்து காண்பிக்க மட்டும் அனுமதிக் கேட்டு பெற்றுக் கொண்டேன். அந்த ஒரு நிமிடம் என்ன செய்யலாம்னு யோசித்தேன். காரணம், தெருக்கூத்து விடிய விடிய செய்யக்கூடிய கலை. அதனால் புரிசை தம்பிரான் அவர்களை சந்தித்து பேசினேன். அவர் என் தோழி வான்மதிக்கு ஒரு நிமிடம் அந்தக் கலையை எப்படி மேடையில் அரங்கேற்றணும்னு சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.

துச்சாதனன் கதாபாத்திரத்தை தேர்வு செய்தோம். அதற்கு முக்கிய காரணம் அந்த கதாபாத்திரம்தான் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம் என எல்லா நிறங்களும் தாங்கி இருக்கும். அந்த உடையில் உள்ள நிறங்கள், சலங்கைகள் மற்றும் புரிசை வார்த்தையை தமிழில் எழுதி என் உடையினை வடிவமைத்தேன். ஒரு உடையில் பல வண்ணங்களை பார்ப்பது வெளிநாட்டினருக்கு புதுசு என்றாலும், நம்முடைய அந்த கலையை பற்றி அவர்கள் புரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அதை நான் என் உடையில் பிரதிபலித்து இருப்பதையும் உணர்ந்தார்கள் என்று நினைக்கும் போது எனக்குள் பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. என்னுடைய டிசைன்கள் துபாயில் பிரபல கடைகளில் விற்கப்படுகிறது, ஆன்லைனிலும் கிடைக்கிறது’’ என்றவர் சஸ்டெயினபில் ஃபேஷன் பற்றி விவரித்தார்.

‘‘எங்க வீட்டில் தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி போன்ற நாட்களுக்கு மட்டும்தான் புத்தாடை வாங்குவது வழக்கம். ஆனால் இன்று அப்படி இல்லை. நண்பர்கள் வீட்டில் பார்ட்டி என்றால் அங்கு அணிந்து செல்ல டிரஸ் வாங்குறோம். அந்த உடையை ஒரு முறைதான் பயன்படுத்தி இருப்போம். வேறு ஒரு நிகழ்ச்சி என்றால் மீண்டும் ஒரு உடையினை தேர்வு செய்கிறோம். அப்படி வாங்கி குவித்த உடைகள் நம்முடைய கப்போர்டை அடைத்துக் கொண்டு இருக்கும்.

ஒரு கட்டத்தில் அந்த உடையை என்ன செய்வதுன்னு தெரியாமல், தூக்கி எறிந்திடுவார்கள். இவ்வாறு எரியப்படும் உடைகளின் குப்பை மலை போல் குவிய துவங்கியுள்ளது. காரணம், நாம் அனைவரும் உடைகளை அதிகம் வாங்க ஆரம்பிச்சிட்டோம். என் சஸ்டெயினபில் பிராண்ட் பொறுத்தவரை ஒரு உடையை குறைந்தபட்சம் 30 முறையாவது அணியுங்கள், அவசியம் என்றால் மட்டுமே உடைகளை வாங்குங்கள் என்பதுதான். ஒரு உடையை திரும்பத் திரும்ப போடுவதில் தப்பில்லை.

சில துணிகள் பழசானாலும், அதன் நிறம் மங்காது. அதனை தூக்கி எறியாமல் மற்றவர்களுக்கு பயன்படுத்த தரலாம். இந்த எண்ணத்தை மக்கள் மனதில் விழிப்புணர்வாக ஏற்படுத்த வேண்டும். அதற்காக நான் ஒவ்வொரு டிசைனை அறிமுகம் செய்யும் போது, இது குறித்து மக்களிடம் பேசுகிறேன். ஒரு புத்தகமும் எழுதி இருக்கேன். இதுதான் என் வாழ்நாள் வேலை. அதை செய்வதால் மனசுக்கு மகிழ்ச்சி மட்டுமில்லாமல் திருப்தியும் கிடைக்கிறது.

எதிர்கால திட்டம் என்று எதுவும் இல்லை. இப்பதான் புரிசையை அறிமுகம் செய்திருக்கேன். அதன் சலசலப்பு அடங்கும் போது வேறு டிசைன் பற்றி யோசிக்கலாம். ஒரு பக்கம் பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு. அதில் புதுப்புது டிசைன்கள் கொண்டு வரும் எண்ணம் இருக்கு. என்னால் வேறு டிசைன்களை உருவாக்க முடியாது என்ற நிலை வந்தால், இதனை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக மாறிடுவேன். ஆனால் என்றுமே சஸ்ெடயினபில் பிராண்டில் இருந்து விலகமாட்டேன்’’ என்றார்
வினோ சுப்ரஜா.

தொகுப்பு: ஷம்ரிதி

The post லண்டன் ஃபேஷன் வீக்கில் மேடை ஏறிய ‘புரிசை’ கலெக்‌ஷன்! appeared first on Dinakaran.

Tags : Purisai ,London Fashion Week ,Vino Subraja ,
× RELATED புரிசை கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு