×

தேசிய கொடி, முத்திரையை பயன்படுத்தி மோசடி; எம்எஸ்எம்இ தலைவர் உள்பட 2 பேரை காவலில் எடுக்க முடிவு: பாஜகவினருடன் தொடர்பா?

சேலம்: மத்திய அரசு அதிகாரி எனக்கூறி தேசிய கொடி, முத்திரையை காரில் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு கைதான 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் எம்எஸ்எம்இ புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60), செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் (34), தமிழ்நாடு சேர்மனான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் முத்துராமன் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், இவர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் வந்தது. இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் முத்துராமன், துஷ்யந்த்யாதவ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால்சாமி(45) என்பவர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், முத்துராமன் எம்எஸ்எம்இ நேஷனல் புரமோஷன் கவுன்சில் சேர்மனாக இருப்பதாக கூறினார். எனக்கு தமிழ்நாடு கவுன்சில் சேர்மன் பதவி வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.50 லட்சம் வாங்கினார்.

ஆனால் அந்த பதவியை எனக்கு தராமல் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் ரூ.4 கோடியை பெற்றுக்கொண்டு அவருக்கு கொடுத்து விட்டார். நான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கேட்டேன். பின்னர் ரூ.9 லட்சத்தை கொடுத்தார். ரூ.41 லட்சத்தை தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைதான இருவரும் மத்திய அரசு பதவியில் இருப்பதாக கூறி அரசு முத்திரை, தேசிய கொடியை பயன்படுத்தியுள்ளனர். இதையடுத்து இவர்களின் பின்னால் இருப்பது யார்? பாஜக முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்கவும், எவ்வழிகளிலெல்லாம் மோசடி செய்துள்ளனர் என்பதை கண்டுபிடிக்கவும் சூரமங்கலம் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில் சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

The post தேசிய கொடி, முத்திரையை பயன்படுத்தி மோசடி; எம்எஸ்எம்இ தலைவர் உள்பட 2 பேரை காவலில் எடுக்க முடிவு: பாஜகவினருடன் தொடர்பா? appeared first on Dinakaran.

Tags : MSME ,BJP ,Salem ,Dinakaran ,
× RELATED எம்எஸ்எம்இ சட்டத்தால் ஜவுளிகளை...