×

தொடர் ரயில் விபத்து குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை

சென்னை: தொடர் ரயில் விபத்து குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கடந்த 6 மாத காலத்தில் இரண்டு ரயில் விபத்துகள் இந்தியாவில் நடந்துள்ளன. இவற்றில் பலர் பலியாகியுள்ளனர். பெரிய அளவில் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு இன்று எழுதியுள்ள கடிதத்தில், நடப்பாண்டில் இரண்டு மிகப்பெரிய ரயில் விபத்துகள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதில் பயணிகளுக்கும், ரயில்வே துறைக்கும் இழப்பு ஏற்பட்டது. முதல் ரயில் விபத்து 2.6.2023 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்தது. மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். 1,200 பேர் படுகாயம் அடைந்தனர். 1995ஆம் ஆண்டு பிரோசாபாத் விபத்திற்கு பின் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்தாகும். சர்வதேச அளவில் 2004க்கு பின்னர் நடந்த மோசமான ரயில் விபத்து இதுவாகும்.

பல நாட்கள் ரயில்வே அமைச்சரும், மூத்த அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பாலசோர் ரயில் விபத்தை போலவே, விஜயநகரம் ரயில் விபத்திலும் மனித தவறு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரண்டு விபத்துகளுமே மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. 5 மாத இடைவெளியில் விபத்துகள் நடந்துள்ளன. விபத்து தொடர்பாக நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழு விவாதிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த நாடும் இந்த ரயில் விபத்துகளின் உண்மையான பின்னணி குறித்து அறிந்து கொள்ள விரும்புகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். குறிப்பாக ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் நிலைக்குழு உரிய விவாதம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் 5 மாதங்கள் கடந்தும் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே மக்களவை சபாநாயகர் தலையிட்டு நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உரிய தீர்வு காண வழி பிறக்கும் என்று டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

The post தொடர் ரயில் விபத்து குறித்து ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Parliamentary Standing Committee on Railways ,DR ,Balu ,Chennai ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!