×

காரியாபட்டி அருகே சேறும் சகதியுமான பாதையில் நாற்று நட்ட கிராமமக்கள்

 

திருச்சுழி, நவ.6: காரியாபட்டி அருகே சகதியில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். காரியாபட்டி அருகே ஆவியூர் பசும்பொன்நகர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, தெருவிளக்குகள், குடிதண்ணீர் வசதி, வாறுகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வந்துள்ளனர். தற்போது கனமழை பெய்துள்ளதால் அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லுபவர்கள் என அனைவரும் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாறுகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலையில் இருப்பதால் இருசக்கரவாகனம் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளாகி கீழே தவறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவக்கூடிய சூழ்நிலை இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இப்பாதையை சரி செய்து தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சேறும், சகதியுமாக காட்சியளித்த சாலையில் நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post காரியாபட்டி அருகே சேறும் சகதியுமான பாதையில் நாற்று நட்ட கிராமமக்கள் appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Thiruchuzhi ,Sakathi ,Aviyur ,Pasumponnagar ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்