×

கோபாலபுரத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கிரிக்கெட் ‘பிட்ச்’ அமைக்க ரூ.1.09 கோடி ஒதுக்கீடு: சீரமைப்பு பணிகள் மும்முரம்

 

சென்னை, நவ.6: கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

குறிப்பாக, கோபாலபுரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானமானது கடந்த சில வருடங்களாக சீர் செய்யாமல் குப்பை கிடங்கு போல் காட்சியளித்தது. இதனால் இளைஞர்கள் இந்த மைதானத்தில் விளையாடுவதை தவிர்த்து வந்தனர். மேலும், மழைக் காலங்களில் இவ்விளையாட்டு திடல் குளம் போல் காட்சியளிக்கும். இதனால் இதை சீர் செய்ய வேண்டும் என இளைஞர்கள் பலர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி மேயர், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆய்வு செய்து, இந்த மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, 17,658 ச.மீ., பரப்பளவு கொண்ட இந்த விளையாட்டு திடலில், 6,187 ச.மீ பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துசண்டை மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்தும் விதமாக இந்த மைதானத்தில் மூன்றில் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகளுக்காக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.09 கோடி ஒதுக்கீடு செய்தார்.

இதற்கான மேம்பாட்டு பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் மூன்றில் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த 2 பணிகளும் முடிவடையும் போது இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியினையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேலும் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சியினையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோபாலபுரத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கிரிக்கெட் ‘பிட்ச்’ அமைக்க ரூ.1.09 கோடி ஒதுக்கீடு: சீரமைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Gopalapuram ,Chennai ,MLA ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...