×

பாண்டியர் கால சிவலிங்கம், கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான தர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கள மேற்பரப்பாய்வில் ஈடுபட்டனர். அப்போது பாண்டியர் கால சிற்பங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: உலகுடி கிராமத்தின் வடக்குத்திசையில் விவசாய நிலத்தின் ஓரமாக புதர்களின் நடுவில் சிவலிங்கம் ஒன்று காணப்பட்டது. இது சதுர வடிவ ஆவுடையுடன் செதுக்கப்பட்டுள்ளது. ஆவுடையானது இரண்டாக உடைந்து காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை ஊர் பொதுமக்கள் சில காலத்திற்கு முன்பு வரை வழிபட்டு வந்துள்ளனர்.

சிவலிங்கத்தின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது முற்கால பாண்டியரின் கைவண்ணத்தில் உருவானதாகவும், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் கருதலாம். சிவலிங்கத்தின் அருகே ஒரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. இது ஒரு முழுமடையாத சிற்பமாகும். தலைப்பகுதி கரண்ட மகுடமும், காதுகளில் காதணியும் தெளிவாக இடம் பெற்றுள்ளது. வலது கையானது கத்தியை பிடித்தபடியும் இடது கையை கீழே தொங்கவிட்டும் அக்கரத்தில் தெளிவற்ற ஓர் ஆயுதம் இனங்காண முடியாத நிலையில் உள்ளது. மேலும் இந்த சிற்பமானது மூன்றடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம். உலக்குடி கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற கோலத்தில் இடம் பெற்றுள்ளது. நான்கடி உயரத்தில் நான்கு கரத்துடனும் வலது மேற்கரத்தில் சக்கரமும் இடது மேற்கரத்தில் சங்கும் இடம்பெற்றுள்ளன. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும் இடது முன் கரத்தை கடிஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரிநூலும் இடையில் இடைக்கச்சை அணிந்தபடியும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. உலக்குடி கிராமத்தில் இது போன்ற சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவதை பார்க்கும்போது முற்காலங்களில் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்திருக்கக் கூடும். இதனை முற்காலங்களின் வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த ஊராக கருதலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

The post பாண்டியர் கால சிவலிங்கம், கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Shiva ,Ulakudi ,Narikudi, Virudhunagar district ,Pandyanadu Cultural Center ,Thamaraikannan ,
× RELATED நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால்...