×

இனிக்க… கடிக்க… நொறுக்க… தயாராகுது செட்டிநாடு பலகாரம்…தீபாவளிக்காக காரைக்குடியில் மும்முரம்

காரைக்குடி: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  தமிழர்களின் பண்டைய கால பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளுக்கு இன்றளவும் பாரம்பரிய கலாச்சார சின்னமாக செட்டிநாடு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக செட்டிநாட்டு பலகாரங்களை தயார் செய்து வருகின்றனர்.

திருமணங்கள், வீட்டு விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுப்பவர்களுக்கு பலகாரம் செய்யப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகைகளுக்காக பலகாரங்கள் செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பலகாரங்களுக்கு தேவையான பொருட்களை கை பக்குவமாக தயார் செய்வதாலும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மறுமுறை பயன்படுத்தாததாலும் பலகாரங்கள் எப்போதுமே ருசியுடன் இருக்கும். இப்பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போவதும் இல்லை. இப்பகுதியில் தேன்குழல்(முறுக்கு), கைமுறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, மகிழம்பு முறுக்கு, மணகோலம்(இனிப்பு), அதிரசம், கைச்சுற்று முறுக்கு 4 முதல் 9 சுற்றுவரை உள்பட 50 வகையான பலகாரங்கள் தயார் செய்யப்படுகிறன.

இது தவிர முள்ளுமுறுக்கு, பிரண்டை முறுக்கு, கைமுறுக்கு, லட்டு, மைசூர் பாகு, ஓலை பக்கோடா போன்ற பலகாரங்களும் தயார் செய்யப்படுகிறது.  இப்பலகாரங்கள் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என நகரத்தார்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதே சுவையுடன் வீட்டில் தயார் செய்ய விரும்புபவர்களுக்கு என முறுக்குமாவு, இடியாப்பமாவு, புட்டு மாவு, அதிரசமாவு, சத்துமாவு, தேன்குழல் மாவு ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு என ஆர்டர்கள் அதிகளவில் வரும். தற்போது மதுரை, சென்னை, கோவை போன்ற பகுதிகளில் செட்டிநாட்டு பலகார கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இக்கடைகளுக்கு ஒரு சில அயிட்டங்கள் மட்டும் இங்கிருந்து அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள உறவினர்களும் இங்கிருந்து அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பருப்பு, எண்ணெய் வகைகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பலகாரங்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று உயர்ந்துள்ளது’’ என்றனர்.

The post இனிக்க… கடிக்க… நொறுக்க… தயாராகுது செட்டிநாடு பலகாரம்…தீபாவளிக்காக காரைக்குடியில் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Chettinad Balakaram ,Diwali ,Karaikudi ,Chettinadu Balakaram ,Chettinad Palakaram ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...