×

புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கான தடையை நீக்க வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம்

சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கான தடையை நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் முரணான வகையில், தமிழ்நாடு போன்ற மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கக் கூடாது. மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதால் நாடு முழுவதும் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தாலும், அவை அனைத்திலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே படிப்பதில்லை. இளநிலை மருத்துவப் படிப்பில் 15% இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதனால், மருத்துவக் கல்லூரிகள் போதிய அளவில் இல்லாத வட இந்திய மாணவர்கள் தான் பயனடைகின்றனர். இந்தியாவில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பு போதிய அளவில் ஏற்படுத்தப்படாத மாநிலங்களில் மருத்துவர்களை உருவாக்குவதற்கும் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றால், அது அந்த மாநிலங்களின் அரசுகள் பல பத்தாண்டுகளாக திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயன் ஆகும். அதற்காக அந்த மாநில அரசுகளை ஒன்றிய அரசும், மருத்துவ ஆணையமும் பாராட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற கட்டுப்பாடு விதித்து தண்டிக்கக்கூடாது. மக்கள்தொகையை கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்கு அதிக மக்களவைத் தொகுதிகளை வழங்குவோம்.

மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்பதற்கும், இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தண்டிக்கும் போக்கு தொடர்ந்தால், அது இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக மாறும். எனவே, 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் என்ற விகிதத்திற்கும் கூடுதலாக உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடையாது. கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் கூடாது என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆணையிட வேண்டும். அதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவை வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கான தடையை நீக்க வேண்டும்: பிரதமருக்கு அன்புமணி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,PM ,CHENNAI ,PMK ,Youth Leader ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...