ஐதராபாத்: முதல்வர் சந்திரசேகரராவை தேர்தலில் தோற்கடித்து தேசிய அளவில் அவரை வளரவிடாமல் தடுக்க காங்கிரஸ்,பாஜ கூட்டு சதி செய்துள்ளதாக தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் குற்றம் சாட்டினார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் நேற்று அளித்த பேட்டியில்,‘‘30ம் தேதி நடக்கும் பேரவை தேர்தலில் பாஜ கட்சி போட்டியிலேயே கிடையாது. பிஆர்எஸ் கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்று தென் மாநிலங்களில் முதல் முறையாக மூன்றாவது முறை முதல்வர் ஆனவர் என்ற பெருமை சந்திரசேகரராவுக்கு கிடைக்கும். மக்களிடையே அரசுக்கு எதிரான அதிருப்தி தேர்தலில் ஓரளவு பிரதிபலிக்கலாம், அதை மறுக்க முடியாது.
மெடிகட்டா அணையின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது அரசியல் உள்நோக்கமுடையது. சந்திரசேகரராவை 3வது முறையாக முதல்வர் ஆக்குவதற்கு மக்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் தெலங்கானாவுக்கு வெளியே உள்ள கர்நாடகா,ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பிஆர்எஸ் கட்சி வலுவடையும். இதை காங்கிரஸ், பாஜ விரும்பவில்லை. தேசிய அளவில் அவரது வளர்ச்சி தங்களுக்கு பாதிப்பு என இரு கட்சிகளும் நினைக்கின்றன. இதனால் அவர் தோல்வியடைவதற்கு சதி செய்கின்றன. இதுதான் அவர்களது திட்டம். ஏற்கனவே இது போல் கூட்டு சதியில் இரு கட்சிகளும் ஈடுபட்டன. இதற்காக அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்’’ என்றார்.
The post சந்திரசேகரராவை தோற்கடிக்க காங்கிரஸ்-பாஜ கூட்டு சதி: தெலங்கானா அமைச்சர் குற்றச்சாட்டு. appeared first on Dinakaran.