×

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணிதுறையினர் தடை விதித்து உள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவில் போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதால் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் வருவது வழக்கம். இங்கு குளித்து மகிழ்வதோடு, அணையின் மேல் பகுதியில் பரிசல் பயணம் செய்தும், பூங்காவில் உற்சாகமாக விளையாடியும், கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் வகைகளை சாப்பிடவும் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையில் 2300 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. அணையில் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருவதால், கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

அதே போன்று பவானி ஆற்றின் வழியோர கிராமங்களில், ஆற்றில் இறங்கவும், பரிசல் பயணம் செல்லுதல், துணி துவைத்தல் போன்றவற்றிற்காக பொதுமக்கள் ஆற்றில் இறங்க பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The post கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kodiveri Dam ,Kobi ,Dinakaran ,
× RELATED திருச்சூர் தொகுதி பாஜ வேட்பாளர்...