×

தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்; தி.நகர், புரசைவாக்கத்தில் கொள்ளையர்களை கண்காணிக்க 1000 போலீஸ் பாதுகாப்பு: சந்தேக நபர்களை எப்ஆர்எஸ் கேமரா மூலம் படம் பிடிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தி.நகர் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் துணிகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க குவிந்துள்ளனர். பொதுமக்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை கண்காணிக்க ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்க வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் சென்னை தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், குரோம்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பொருட்கள் மற்றும் துணிகள் வாங்கி வருகின்றனர். அதேநேரம் தீபாவளி பண்டிகை இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதால், கடைசி ஞாயிற்று கிழமையான இன்று அதிகாலை முதலே தி.நகர். புரசைவாக்கம், குரோம்பேட்டை, பாண்டிபஜார், பாரிமுனை பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

குறிப்பாக, தி.நகர் ரெங்கநாதன் சாலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகளவில் பொதுமக்கள் துணிகள் வாங்க குவிந்துள்ளனர். இதனால் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்ளையர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னை மாநகர காவல்துறை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆன்ந்த சின்கா, அஸ்ரா கர்க் ஆகியோர் தலைமையில் கொள்ளையர்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் ரெங்கநாதன் பகுதியில் மட்டும் பொதுமக்களை கண்காணிக்க 7 கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர். வாக்கமாக ரெங்கநாதன் தெருவில் 50 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பொதுமக்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால் காவல்துறை கூடதலாக தற்காலிகமாக 50 கேமராக்கள் பொருத்தி சிறப்பு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகின்றனர். இதுதவிர பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையிலும், அவர்களை அடையாளம் காட்டும் வகையில் தி.நகர், பாண்டி பஜார், புரசைவாக்கம், பாரிமுனை பகுதியில் எப்ஆர்எஸ் கேராக்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பொருட்கள் வாங்க வரும் பெண்களுக்கு போலீசார் சார்பில் கழுதியில் அணிந்துள்ள நகைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கி வருகின்றனர். கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் மணிபர்சை பரிக்கும் கொள்ளையர்களை கண்காணிக்க பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் என தனித்தனியாக குழுக்கள் அமைத்து சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றி வந்தால் அவர்களை போலீசார் பிடித்து, எப்ஆர்எஸ் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து குற்றப்பின்னணியில் உள்ள நபரா என்று விசாரணைக்கு பிறகே அவர்களை போலீசார் அனுப்புகின்றனர். இதுதவிர பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வழக்கத்தை விடு போலீசார் கூடுதலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

The post தீபாவளி பண்டிகைக்கு துணிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்; தி.நகர், புரசைவாக்கத்தில் கொள்ளையர்களை கண்காணிக்க 1000 போலீஸ் பாதுகாப்பு: சந்தேக நபர்களை எப்ஆர்எஸ் கேமரா மூலம் படம் பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,T. Nagar ,Purasaivakam ,FRS ,Chennai ,D. Nagar ,Purasaivakkam ,
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...