×

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து; ஒன்றிய அரசின் சொதப்பலால் பயணிகளிடம் வரவேற்பு இல்லை: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக். 14ம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதற்காக 150 பேர் பயணிக்க கூடிய செரியாபாணி என்ற கப்பல் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்டது. முதல் நாளில் 50 பேர் மட்டுமே இலங்கைக்கு பயணம் செய்தனர். அடுத்த நாள் 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ததால் கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 16ம் தேதி 15 நபர்கள் மட்டும் இலங்கைக்கு பயணம் செய்தனர். 18, 20ம் தேதிகளிலும் குறைவான பயணிகளே இலங்கைக்கு சென்றனர்.

இதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, 23ம் தேதி நாகையில் இருந்து கப்பல் கொச்சின் சென்று விட்டது. மொத்தமாக 4 முறை மட்டுமே, கப்பல் இலங்கைக்கு சென்று வந்தது. ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால், கப்பல் போக்குவரத்து பயணிகளிடம் போதிய வரவேற்பை பெறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து உண்மையிலேயே வரவேற்க கூடிய ஒன்று. இதில் ஏராளமான பயன்கள் உள்ளன. இப்போது சென்னையில் இருந்து மட்டுமே இலங்கைக்கு தனியார் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது. இதில் செல்ல குறைந்தது 8 மணி நேரம் ஆகும். ஆனால் நாகையில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கைக்கு சென்று விடலாம். மேலும் இந்த கப்பல் போக்குவரத்து மூலம் தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்படும். இரு நாட்டு மீனவர்களின் உறவு வலுவடையும்.

ஆனால் ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால், இந்த கப்பல் போக்குவரத்து பயணிகளிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக காலை 9 மணிக்கு கப்பல் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிகாலை 4.30 மணிக்கு துறைமுகத்துக்கு வந்து விட வேண்டும். அவ்வாறு வரும் பயணிகள் காலை உணவு சாப்பிட முடிவதில்லை. கப்பலிலும் ஸ்நாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டது. எனவே புறப்படும் நேரத்தை காலை 11 மணியாக மாற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதை துறைமுக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

மேலும் கட்டணம் ரூ.4,500ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் வழங்கி, கட்டணத்தை குறைக்க வேண்டும். நாகையிலேயே பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க வேண்டும். இப்போது பாஸ்போர்ட் எடுக்க தஞ்சைக்கு செல்ல வேண்டி உள்ளது. நாகை துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும். மழை காலம் என்பதாலேயே கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஜனவரியில் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துவங்கும் போது இந்த குறைபாடுகளை சரி செய்தால், கப்பல் போக்குவரத்து பயணிகளிடம் வரவேற்பை பெறும் என்றனர்.

The post நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து; ஒன்றிய அரசின் சொதப்பலால் பயணிகளிடம் வரவேற்பு இல்லை: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,EU ,Congessian ,EU government ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...