×

அதியமான்கோட்டையில் சுகாதார நடைபயிற்சி தளம்

 

தர்மபுரி, நவ.5: நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ், அதியமான்கோட்டையில் சுகாதார நடைபயிற்சி தளத்தை, காணொலி காட்சி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடப்போம் நலம் பெறுவோம் எனும் சுகாதார நடைபயிற்சி தளத்தினை, நேற்று தமிழகம் முழுவதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக வளாகத்திலிருந்து கலெக்டர் குடியிருப்பு பகுதி, தர்மபுரி சிப்காட் அமையவுள்ள பகுதிகளை உள்ளடக்கிய 8 கி.மீ., தூரம் சுகாதார நடைபயிற்சி நடந்தது. இதில், தர்மபுரி கலெக்டர் சாந்தி, எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ ஆகியோர் சுகாதார நடைபயிற்சி மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், டிஆர்ஓ பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்ரமணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி, திமுக ஒன்றிய செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘உலக சுகாதார அமைப்பின் தரவுகள்படி, உடற்பயிற்சி செய்வது நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களின் தாக்கத்தை 27 சதவிகிதமும், இதயநோயின் தாக்கத்தை 30 சதவிகிதமும் குறைக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. நடைபயிற்சி மக்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவே, பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, 8 கி.மீ., தூரம் கொண்ட நடைபாதையை கண்டறிந்து, அதியமான்கோட்டையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதைகளில் விழிப்புணர்வு பதாகைகள், நடைபயண தூரம் குறித்த தகவல்கள், இளைப்பாற அமரும் வகையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன,’ என்றார்.

 

The post அதியமான்கோட்டையில் சுகாதார நடைபயிற்சி தளம் appeared first on Dinakaran.

Tags : Athiyamankottai ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED கஞ்சாவை பதுக்கி விற்றவர் கைது