×

கலைஞர் நூற்றாண்டையொட்டி குமரியில் இருந்து சென்னைக்கு‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம்: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: கலைஞர் நூற்றாண்டையொட்டி, எழுத்தாளர் கலைஞர் குழுவின் ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி பயணத்தை கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று தொடக்கி வைத்தார். கலைஞரின் நூற்றாண்டையொட்டி, கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு அளித்த மக்கள் நல திட்டங்களையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி பயணம் தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படுகிறது. முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கலைஞர் பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து தொடங்கியது. இதனை கூட்டுறவு துறை அமைச்சரும் எழுத்தாளர் கலைஞர் குழு தலைவருமான கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்றார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், கயல்வழி செல்வராஜ், குமரி மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி, விஜயதரணி எம்.எல்.ஏ.உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குழுவின் உறுப்பினர் செயலர் அமுதவல்லி நன்றி கூறினார். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக 30 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு டிசம்பர் 4ம் தேதி சென்னை சென்றடையும். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடவுள்ளார். ஊர்தியின் வெளிப்புறத்தில் கலைஞரின் பன்முகத் தன்மையினை விளக்கும் புகைப்படங்களும், கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஊர்தியை பார்வையிடலாம். உட்புறத்தில் கலைஞரின் கோபாலபுர இல்ல உள் அமைப்பும், அஞ்சுகம் அம்மாள் உருவச்சிலையும் அதன் அருகில் கலைஞர் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று பொதுமக்கள் ‘செல்பி’ எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.

 

The post கலைஞர் நூற்றாண்டையொட்டி குமரியில் இருந்து சென்னைக்கு‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம்: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Muthamither ,Kumari ,Chennai ,Minister ,Periyakaruppan ,Nagercoil ,Artist ,Minister of Cooperatives ,KR Periyakaruppan ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...