×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் கடைகளில் புத்தாடை வாங்க மக்கள் ஆர்வம்: ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரம் குறைந்து விட்டதாக வியாபாரிகள் புலம்பல்

பாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் கடைகளில் புத்தாடை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது ஒரு புறமிருக்க, ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரம் குறைந்துவிட்டதாக வியாபாரிகள் புலம்புகின்றனர். பண்டிகை நாட்கள் என்றாலே நமது அனைவரின் நினைவுக்கு வருவது புத்தாடைகள் மட்டுமே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கண்டிப்பாக அனைவரும் புத்தாடைகளை எடுத்து மகிழ்வார்கள். முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பே வார இறுதி நாட்களில் மக்கள் கடைகளுக்குச் சென்று புத்தாடைகளை வாங்கி வருவார்கள். மேலும் அதனை டெய்லர் கடைகளில் கொடுத்து தைத்து அதனை உடுத்துவார்கள்.
இந்த சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி ரெடிமேட் ஆடைகள் வர ஆரம்பித்தன. அதனையும் சில நேரங்களில் டெய்லர் கடைகளில் கொடுத்து சற்றே அளவு சரிசெய்து உடுத்தி வந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை நிலைமை இப்படி இருந்தது. தற்போது செல்போன்களின் அசுர வளர்ச்சியால் ஆன்லைன் வர்த்தகமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தீபாவளி விற்பனை சில இடங்களில் மட்டுமே சூடு பிடித்துள்ளது.. வடசென்னையின் பிரதான பகுதியான வண்ணாரப்பேட்டை ஜிஏரோடு மற்றும் எம்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. மேலும் 800-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளும் உள்ளன. அங்குள்ள இந்த துணிக்கடைகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். மேலும் இந்த கடைகளை நம்பி உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இவ்வாறு ஒட்டுமொத்தமாக அப்பகுதியில் துணி வியாபாரங்களை நம்பி மட்டும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தற்போது துணிகளை வாங்க பொதுமக்களும் ஆர்வமுடன் தயாராகிவிட்டனர். அந்த வகையில் பலரும் சென்னையில் தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளுக்கு அடுத்தபடியாக வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு, ஜி.ஏ ரோடு உள்ளிட்ட இடங்களில் அதிகமாக துணிகளை வாங்குவது வழக்கம். பெரும்பாலும் இப்பகுதியில் சில்லறை வியாபாரத்துடன் மொத்த வியாபார துணிக்கடைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதனால் விலை குறைவாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வண்ணாரப்பேட்டை பகுதிக்கு வந்து துணிகளை எடுக்கின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தால் முன்பை விட தற்போது வியாபாரம் குறைந்து. மேலும் ஆன்லைனில் இல்லாத பல ரகங்கள் தற்போது கடைகளில் கிடைப்பதாகவும் ஆன்லைன் வர்த்தகத்தை விட கடைகளுக்கு நேரில் வந்து துணிகளை போட்டு பார்த்து வாங்குவது தான் நல்லது எனவும் வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு, ஜி.ஏ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கத் தலைவர் தமிமுன் அன்சாரி கூறுகையில், ஆன்லைன் வியாபாரம் வந்த நாள் முதல் எங்களது வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது. 10 வருடங்களுக்கு முன்பு தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வியாபாரம் தொடங்கிவிடும். ஆனால் தற்போது தீபாவளிக்கு பத்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்தான் ஓரளவிற்கு கூட்டம் வர ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வியாபாரம் குறைந்து கொண்டே வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் பண்டிகை காலங்களில் 40 சதவீத வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக கடைக்கு வந்து துணிகளை எடுக்கும்போது பல்வேறு விதமான வியாபாரங்கள் நடைபெறும். அவர்கள் வீட்
டில் இருந்து ஆட்டோவில் ஏறி வருவார்கள். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பயன்பெறுவார்கள். மேலும் துணி எடுக்க வந்த இடத்தில் சாப்பிடுவார்கள். இதனால் உணவகங்களில் வியாபாரம் நடக்கும். இவ்வாறு பல வியாபாரங்கள் அதனை சார்ந்து இருக்கும். ஆன்லைனில் துணிகளை எடுப்பது பெண் பார்க்க செல்லும்போது போட்டோவை மட்டும் பார்த்துவிட்டு பெண்ணை பிடித்துள்ளது என்று சொல்வதற்குச் சமம். நேரில் பார்த்து திருமணம் செய்து கொள்வதற்கும், போட்டோவை பார்த்து திருமணம் செய்து கொள்வதற்கும் என்ன வித்தியாசம் உள்ளதோ அதே வித்தியாசம்தான் ஆன்லைனில் நாம் துணிகளை எடுப்பதிலும் உள்ளது. ஆனால் நேரில் வந்து துணிகளை எடுக்கும்போது அந்த துணி என்ன மாதிரியான துணி மற்றும் அதன் கலர் என்ன உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் நமக்கு தெரியவரும். மேலும் துணிகளை வியாபாரம் செய்யும் கடைகள் தீபாவளிக்கு மட்டும் துணிகளை வியாபாரம் செய்துவிட்டு சென்று விடுவதில்லை. காலங்காலமாக அவர்கள் அதே இடத்தில் உள்ளார்கள். துணிகளில் ஏதாவது பழுது என்றால் கூட அவர்கள் மாற்றி கொடுப்பார்கள். ஆனால் ஆன்லைனில் வாங்கிய பொருட்களை மாற்றுவதற்கு படாத பாடு பட வேண்டியுள்ளது.

இதனால் சிலர் ஆன்லைனில் துணிகளை வாங்குவதை தவிர்த்து விட்டனர். இருந்த போதும் தற்போது எங்களுக்கு வியாபாரம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டுதான் வருகிறது. மேலும் தற்போது துணி எடுக்க வருபவர்கள் செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு வந்து இதுபோன்ற டிசைன்களில், இதுபோன்ற துணிகள்தான் வேண்டும் என கூறுகிறார்கள்.
அவர்கள் செல்போனில் எதிர்பார்ப்பதை நாம் நேரடியாக கொடுக்க முடியாது. அதனை கஸ்டமர்கள் புரிந்து கொள்வதில்லை. இதனால் ஒரு கடை மாறி மற்றொரு கடைக்கு அவர்கள் அலைந்து திரிந்து கடைசியில் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஆன்லைனில்தான் புக் செய்கிறார்கள். ஆனால் அது கிடைப்பதில்லை. ஆன்லைன் வியாபாரங்களை பார்த்து சில கடைக்காரர்களும், தங்களது கடைகளை யூடியூபில் பிரபலப்படுத்தி வருகின்றனர். எங்களிடம் இரண்டு பேண்ட் வாங்கினால் மூன்று பேண்ட் இலவசம், 3 ஷர்ட் வாங்கினால் 5 ஷர்ட் இலவசம் என தங்களது பங்கிற்கு அவர்களும் விளம்பரம் செய்ய தொடங்கிவிட்டனர். எனவே வருங்காலங்களில் ஆன்லைன் வர்த்தகம் வியாபாரிகளுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிவித்தார்.

 

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் கடைகளில் புத்தாடை வாங்க மக்கள் ஆர்வம்: ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரம் குறைந்து விட்டதாக வியாபாரிகள் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Vannarpet ,Purasaivakkam ,Bavali festival ,Vannarappet ,Diwali ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...