சென்னை: தமிழகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள வீடு, அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் சோதனையை தொடங்கினர்.
நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல, சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனம் சென்னையில் பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் பல மடங்கு இந்த நிறுவனத்தில் முதலீடு பெருகியுள்ளது. சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வருமான வரித்துறையில் கணக்குகள் தவறாக காட்டியிருப்பதாக புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அந்த நிறுவன அலுவலகம், அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் சோதனையை தொடங்கினர். அதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனமும் சென்னையில் அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் சார்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிறுவனமும் பல நூறு கோடி ரூபாய் வருமான வரி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தப் புகார்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுமார் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். இந்தச் சோதனை நேற்று 2வது நாளாக நடந்தது. இந்தச் சோதனையில் தனியார் நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
The post அமைச்சர் எ.வ.வேலு, காசா கிராண்ட் நிறுவனங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு appeared first on Dinakaran.