×

என்எல்சிக்கு நிலம் அளித்தவர் மாற்று மனை கோரிய வழக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தீபாவளியை கலெக்டர் ஆபீசிலா கொண்டாட முடியும்?: உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் , என்.எல்.சி., விரிவாக்கத்துக்காக எனக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் குடியிருந்த வீடு இருந்த நிலம் ஆகியவை 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று வீட்டு மனை, வேலை வாய்ப்பு தருவதாக என்.எல்.சி நிறுவனத்தால் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மாற்று வீட்டு மனை கேட்டு விண்ணப்பம் செய்தும் எனக்கு மாற்று மனை வழங்கவில்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எனது விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி, விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், மாற்று வீட்டு மனை பெற எனக்கு தகுதி உள்ளது என்று கூறி, எனக்கு மாற்று நிலம் வழங்க தாசில்தாருக்கு கடந்த 2010 ஆகஸ்ட் 31ம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால், நான் என் சொந்த கிராமத்தில் வசிக்காததால் மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று பின்னர் வந்த கடலூர் மாவட்ட கலெக்டர் 2014ல் உத்தரவிட்டார். எனவே, கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து மாற்று வீட்டு மனை வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட கலெக்டர் பெயரில் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரருக்கு உள்ளூரில் நிரந்தர முகவரி இல்லை. வெளியூரில் இருக்கும் அவருக்கு, மாற்று வீட்டு மனை பெற தகுதியில்லை என்று கூறியிருந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜராக வக்கீல் கே.சக்திவேல், மனுதாரருக்கு சொந்த ஊரை விட்டு, வேலைக்காகத்தான் சென்னை வந்துள்ளார் என்றார்.

இதையடுத்து நீதிபதி, வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு வரவே மாட்டார்களா, சொந்த ஊருக்கு செல்லக்கூடாதா, குடும்பத்தினர், உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரமாட்டார்களா, துக்க நிகழ்ச்சிக்கு கூட செல்ல மாட்டார்களா, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஏராளமானோர் சொந்த ஊருக்குத்தான் செல்வார்கள். அப்படி செல்பவர்களுக்கு வீடு இல்லை என்றால், தீபாவளி, பொங்கலை கலெக்டர் அலுவலகத்திலா கொண்டாட முடியும் என்று அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி, மனுதாரருக்கு 3 மாதங்களுக்குள் மாற்று வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கடலூர் கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

 

The post என்எல்சிக்கு நிலம் அளித்தவர் மாற்று மனை கோரிய வழக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தீபாவளியை கலெக்டர் ஆபீசிலா கொண்டாட முடியும்?: உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : NLC ,Diwali ,High Court ,Chennai ,Ashokumar ,Thiruvanmiyur ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...