×

காசா கிராண்ட் நிறுவன ஆவணங்களை வேறு நிறுவனத்துக்கு அளித்ததாக ஊழியர் மீது போலீசில் புகார்: வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில் பரபரப்பு

சென்னை: காசா கிராண்ட் நிறுவனத்தில் ஆவணங்களை திருடியதாக ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு என பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வந்தது. மேலும், காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளிடம் ஐ.டி அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும், கோவையில் உள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டிலும் சோதனை நடைப்பெற்றது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் சட்ட உதவி மேலாளராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தங்களது காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் விளம்பர பிரிவில் பணிபுரியும் சதீஷ் என்பவர் கடந்த சில மாதங்களாக காசா கிராண்ட் ஆஸ்பயர் என்ற திட்டத்தின் அனைத்து விளம்பர ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை திருடி வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். இதனால் தங்கள் நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, காசா கிராண்ட் நிறுவனத்தின் விளம்பர தகவல்கள் மற்றும் ரகசிய தகவல்களை திருடி வேறொரு நிறுவனத்துக்கு விற்ற ஊழியர் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காசா கிராண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தங்கள் நிறுவனத்தின ரகசிய ஆவணங்களை ஊழியர் ஒருவர் வேறு நிறுவனத்துக்கு விற்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

The post காசா கிராண்ட் நிறுவன ஆவணங்களை வேறு நிறுவனத்துக்கு அளித்ததாக ஊழியர் மீது போலீசில் புகார்: வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் நிலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Casa Grant ,CHENNAI ,Casa ,Thiruvanmiyur, Chennai… ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு