×

மாணவர்கள் சட்டையை பிடித்து தாக்கிய பாஜ பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது: 5 பிரிவுகளில் வழக்கு

சென்னை: மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சட்டையை பிடித்து தாக்கியதுடன், டிரைவர், கண்டக்டரை அவதூறாக பேசிய பாஜ பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்தனர். போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி நேற்று முன்தினம் மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த சினிமா நடிகையும், பாஜ பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் (39) என்பவர், கெருகம்பாக்கம் அருகே பேருந்தை வழிமறித்து நிறுத்தி, மாணவர்களின் சட்டையை பிடித்து இழுத்து, அடித்து கீழே இறக்கி விட்டார். பின்னர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை நாயே என வாய்க்கு வந்தபடி வசைபாடிவிட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது, நடிகையின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தனிநபர் இதுபோன்று சட்டத்தை கையில் எடுக்கலாமா, போலீஸ் போல் தன்னை நினைத்து, அரசு ஊழியர்களை மிரட்ட இவர் யார், மாணவர்களை அடிக்க இவருக்கு யார் அதிகாரம் வழங்கியது. இவரை கைது செய்ய வேண்டும் என எதிர்ப்பு குரல் கிளம்பியது. மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் சென்றால், போலீசிலோ, போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடமோ புகார் செய்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இதுபற்றி மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், மாணவர்களை தாக்கியது சினிமா நடிகையும் பாஜ கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது. இவர், ரஜினி நடித்த அண்ணாத்த, டைரி, இரும்பு திரை, நட்பே துணை, துப்பறிவாளன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போரூர் எஸ்ஆர்எம்சி காவல் சரக உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் பெண் போலீசார், கெருகம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டிற்கு நேற்று சென்றனர். அப்போது, சிவரஞ்சனா நாச்சியார் வீட்டில் இல்லை என அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவர் வீட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், போலீசார் வீட்டுக்குள் சென்றனர். ஆனால், படுக்கை அறைக்கு சென்று, கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்ட அவர், நீண்ட நேரம் வெளியே வரவில்லை. பொறுமையாக காத்திருந்த போலீசார், ஒருவழியாக அவரை வெளியே வரவழைத்தனர். அப்போது, நான் உடை மாற்றிக்கொண்டு இருந்தேன்.

அறைக்குள் இருந்து நீண்ட நேரமாக வெளியில் வராவிட்டால், தொந்தரவு செய்வீர்களா, என்னை கைது செய்வதற்கான வாரன்ட், எப்ஐஆர் நகல்களை காட்டுங்கள் என கேட்டு போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அனைத்தும் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, தனது காரில் காவல் நிலையம் வருவதாக ரஞ்சனா நாச்சியார் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால், போலீசார் தங்களது வாகனத்தில் அவரை அழைத்து செல்வதாக கூறினர். இதை ஏற்க மறுத்து ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்த பாஜ நிர்வாகிகள் சிலர், அவரது வீடு முன்பு திரண்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் ஒருவழியாக அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து, அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பள்ளி மாணவர்களை தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், பெரும்புதூர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம்குமார் முன் அவரை ஆஜர்படுத்தினர். அவரை பிணையில் விடுவித்த நீதிபதி, தொடர்ந்து 40 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கையெழுத்திட உத்தரவிட்டார்.

 

The post மாணவர்கள் சட்டையை பிடித்து தாக்கிய பாஜ பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது: 5 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Ranjana Nachiar ,Chennai ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் தடைமீறி...