×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்

சென்னை: ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கிலோ மீட்டர் சுகாதார நடைபாதையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் உள்ள முத்துலட்சுமி பூங்கா அருகே நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சுகாதார துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பெசன்ட் நகரில் கடற்கரை சாலையில் மேடைக்கு வந்தடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து 38 மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுகாதார நடைபாதையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: நடைபாதையில் அமரும் இருக்கைகள், செல்பி இடங்கள் என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நடைபயணத்தில் எங்களை ஊக்கப்படுத்தி எங்களை போல உள்ள இளைஞர்களுக்கு ஊக்கமாக இருப்பவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘நம் முதல்வர் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வையும், உடற்பயிற்சி செய்வதால் வரும் நன்மைகள் குறித்தும் பல்வேறு செய்திகளை நாட்டுக்கு தெரிவித்து கொண்டிருக்கிறார். விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் இதுவரையில் 2 கோடி இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கும், விளையாட்டில் பங்கேற்க ஊக்கமளிப்பதிலும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க ஒரே தீர்வு நடப்பதும், உடற்பயிற்சி செய்வதும் தான். நோய் வருவதற்கு முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்’ என்றார்.

 

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Nadaphom Kalam Uthoom ,Chennai ,Tamil Nadu ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...