×

சென்னை குன்றத்தூரில் மாணவர்களை தாக்கியதாக கைதான பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி ஒரு மாநகர பஸ் சென்றது. அதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடியும், மேற்கூரையில் அமர்ந்தபடியும் பயணம் செய்தனர். இதை பார்த்த பெண் ஒருவர், பஸ்ைச வழிமறித்து போலீசார் போல் டிரைவர் மற்றும் நடத்துனரை அவதூறாக திட்டியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் சட்டையை பிடித்து இழுத்து அடித்து, பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி அனைத்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவி, பெண்ணின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தனிநபர் இதுபோன்று சட்டத்தை கையில் எடுக்கலாமா? எனவே அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என எதிர்ப்பு குரல் கிளம்பியது. இதையடுத்து மாங்காடு போலீசார், மாணவர்களை தாக்கி மாநகர டிரைவர் மற்றும் நடத்துனரை வசைபாடிய பெண் யார்? நிஜமாகவே போலீசா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  இதில் மாணவர்களை தாக்கியது சின்னத்திரை நடிகையும் பாஜவின் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது. இவர், ரஜினி நடித்த அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பஸ்சை வழிமறித்து அரசு ஊழியர்களை அவதூறாக பேசியதாக டிரைவர் மற்றும் நடத்துனர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி இன்று காலை போரூர் எஸ்ஆர்எம்சி காவல் சரக உதவி ஆணையர் ராஜுவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் பெண் போலீசார், கெருகம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டிற்கு சென்றனர். அப்போது, ‘ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இல்லை’ என அவரது பெற்றோர் கூறியுள்ளனர். பின்னர் அவர் வீட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டதும் போலீசார் வீட்டுக்குள் சென்றனர். அப்போது, தன்னை கைது செய்வதற்கான வாரண்ட் மற்றும் எப்ஐஆர் நகல்களை ரஞ்சனா நாச்சியார் கேட்டுள்ளார். அனைத்தும் மாங்காடு காவல்நிலையத்தில் இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் ரஞ்சனா நாச்சியார் போலீசாருடன் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதை அறிந்ததும் பாஜ நிர்வாகிகள் சிலர், அவரது வீடு முன்பு திரண்டனர். தற்போது ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரஞ்சானாவை கைது செய்த போலீசார் ஸ்ரீபெரும்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது ரஞ்சனா ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ராம்குமார் விசாரணை செய்தார்.

அப்போது நடிகை ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாங்காடு காவல்நிலையத்தில் 40 நாள் காலை, மாலையளர்கை கையெழுத்திட ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

The post சென்னை குன்றத்தூரில் மாணவர்களை தாக்கியதாக கைதான பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனாவுக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Ranjana ,BJP ,Kunrathur, Chennai ,Chennai ,Borur ,Gunratur ,
× RELATED கதாநாயகிக்கு சதைபிடிப்பு தேவை; கொழு...