×

தலைமை பொறுப்புக்கு வருவதை சிவன் தடுக்க முயற்சித்தார்: இஸ்ரோ தலைவர் சோமநாத் பரபரப்பு குற்றச்சாட்டு


திருவனந்தபுரம்: நான் தலைமை பொறுப்புக்கு வருவதைத் தடுக்க முன்னாள் தலைவர் சிவன் முயற்சித்தார் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சோமநாத் தனது சுயசரிதையில் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரோ தலைவரான எஸ். சோமநாத் ‘நிலாவு குடிச்ச சிங்கங்கள்’ என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதி இருக்கிறார். அதில் சந்திரயான் 2 தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும், முன்னாள் தலைவர் சிவன் குறித்தும் பரபரப்பு தகவல்களை குறிப்பிட்டு உள்ளார். சுயசரிதையில் உள்ள சில முக்கிய விவரங்கள் வருமாறு: இஸ்ரோவின் தலைவராக நான் வருவதை தடுக்க முன்னாள் தலைவர் சிவன் முயற்சித்தார்.

2018ல் எஸ்.எஸ். கிரண்குமார் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றபோது 60 வயது முடிந்து பணி நீட்டிப்பில் இருந்த சிவனின் பெயருடன் எனது பெயரும் தலைவர் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது எனக்கு இஸ்ரோ தலைவர் பதவி உறுதியாக கிடைக்கும் என்று கருதினேன். ஆனால் சிவனுக்குத் தான் அந்த பதவி கிடைத்தது. தலைவரான பின்பும் அவர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் பொறுப்பை கைவசம் வைத்திருந்தார். எனக்கு அந்த பதவி அப்போது நியாயமாக கிடைத்திருக்க வேண்டும். கடைசியில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் சுரேஷ் தலையிட்டதன் காரணமாக 6 மாதத்துக்கு பிறகு எனக்கு அந்த பதவி கிடைத்தது.

3 வருடம் இஸ்ரோவின் தலைவராக இருந்த பிறகு ஓய்வு பெறுவதற்கு பதிலாக அந்த பதவியில் நீடிக்க சிவன் முயற்சித்தார். சந்திரயான் 2 நிலவில் இறங்கிய அன்று பிரதமர் மோடி வந்தபோது அவரை வரவேற்பவர்களின் பட்டியலில் இருந்து என்னை சிவன் நீக்கிவிட்டார். சாப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்னை தான் நிலவில் இறங்க முடியாததற்கு காரணம் என்ற உண்மையை கூறுவதற்குப் பதிலாக லாண்டருடன் இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறியது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இவ்வாறு சோமநாத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து தற்போதைய தலைவர் சோமநாத் தனது சுயசரிதையில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

‘‘எதையும் சொல்லவிரும்பவில்லை’’
இதுதொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: நான் எதையும் சொல்லவிரும்பவில்லை. நான் சொல்வதை விட என்னுடன் பணியாற்றியவர்கள், இஸ்ரோவில் இப்போதும் பணியாற்றுகின்றனர், அவர்களிடம் கேளுங்கள். அப்போது எவ்வளவு தூரம் உண்மை என்பதை தெரிந்துகொள்ளலாம். இதற்கு நான் பதில் சொல்வதைவிட வேறு நபர்கள் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். அவர்கள் இது தொடர்பான தகவலை தருவார்கள். மேலும் இஸ்ரோவின் இணையதளத்தில் இது தொடர்பான விபரங்கள் நிறைய டேட்டாக்கள் ‘பப்ளிக் டொமைனில்’ வெளிப்படையாக உள்ளன. அதில் இருந்தும் தெரிந்துகொள்ளலாம் என்றார்.

The post தலைமை பொறுப்புக்கு வருவதை சிவன் தடுக்க முயற்சித்தார்: இஸ்ரோ தலைவர் சோமநாத் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Sivan ,ISRO ,Somnath ,Thiruvananthapuram ,Former ,President ,Indian Space Exploration Centre ,Shivan ,Isero ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...