×

மத போதகரின் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டு நீடிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: மத போதகர் ஜாகிர் நாயக் நடத்தி வரும் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுக்கு நீடித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தலைமையிலான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எஃப்) மீதான தடையை மேலும் ஐந்தாண்டுக்கு நீடித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி ஐஆர்எஃப் அறக்கட்டளையானது சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஐஆர்எஃப் ஈடுபட்டதாகவும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகவும், நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் செயல்களை செய்ததாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜாகிர் நாயக்கின் உரைகள் ஆட்சேபனைக்குரியவையாக உள்ளன. மதக் குழுக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஊக்குவிக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை தீவிரவாத செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, ஐஆர்எஃப் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது’ என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மலேசியாவில் வசித்து வரும் ஜாகிர் நாயக், சர்வதேச தொலைக்காட்சி நெட்வொர்க்குகள், இணையம், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தனது உரையை நிகழ்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post மத போதகரின் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டு நீடிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ministry of Home Affairs ,New Delhi ,Zakir Naik ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...