×

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனைய சாலையில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனைய சாலையில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலைய உள்நாட்டு விமான முனையத்தின் எதிரே பயணிகளை ஏற்றி செல்வதற்கான பிக்கப் பாயிண்ட் மற்றும் ஒரு கோயில் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால், சென்னை விமான நிலைய வளாக பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது. அங்கு மழைநீரை வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீர் வெளியேற வழியின்றி, பயணிகளின் வருகை பகுதி மற்றும் வாகனங்கள் செல்லும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உள்நாட்டு விமான பயணிகளை ஏற்றி வந்த வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்தபடி சென்றன. இதனால் பயணிகள் தவித்தனர்.

இதே நிலை நீடித்தால், உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதிக்குள் மழைநீர் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்து விமான நிலைய உயரதிகாரிகள், பராமரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்கள் மூலமாக, மழைநீர் கால்வாய் அடைப்புகளை நீக்கும் பணி தொடங்கியது. சிறிது நேரத்தில் மழைநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் அரை மணி நேரத்தில் நிலைமை சீரடைந்தது. இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘மழைநீர் கால்வாய் அடைப்புகளை அகற்றுவதில், கவனக்குறைவாக செயல்பட்ட பணியாளர்கள் பற்றி விசாரித்து வருகிறோம். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

The post சென்னை விமான நிலைய உள்நாட்டு முனைய சாலையில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Meenambakkam ,Domestic Terminal Road ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...