×

பவானிசாகர் அணையில் நீர் இருப்பு சரிவு நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

*தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் பாராட்டு

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நன்செய் பயிர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழையானது எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் சரசரவென சரிந்து வந்தது. இதனால் அணையில் உள்ள தண்ணீர் இருப்பை கொண்டு நன்செய் பாசனத்திற்கு முழுமையாக விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பாசன பகுதிகளில் பெரும்பாலும் நெல் நாற்று நடவு செய்யப்பட்டுவிட்ட சூழலில் தண்ணீர் இல்லாவிட்டால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகளில் உள்ள தண்ணீரை பவானி ஆற்றில் திறந்துவிட மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கீழ்பவானி பாசன விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் மின் வாரிய தலைமை பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு கீழ்பவானி பிரதான திட்ட கால்வாய் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பவானிசாகர் அணையில் நீர் இருப்பு மிக குறைவாக உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அணைக்கு மேல்புறம் உள்ள மின் வாரிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட மின் வாரிய தலைமை பொறியாளர் நீலகிரி மாவட்டம், குந்தா அணைகளின் நிகர இருப்பின்படி நாள் ஒன்றுக்கு 1400 கன அடி தண்ணீர் திறந்துவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவானிசாகர் அணைக்கு விரைவில் நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட கீழ்பவானி பாசன சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

The post பவானிசாகர் அணையில் நீர் இருப்பு சரிவு நீர்மின் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Tamil Nadu government ,Erode ,Erode district ,Kilibhavani ,
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது