×

பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: தமிழக – கர்நாடக போக்குவரத்து 14 மணி நேரம் பாதிப்பு

அந்தியூர்: பர்கூர் மலைப்பாதையில் நேற்று மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் தமிழகம், கர்நாடகம் இடையே 14 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் கடந்த மாதத்தில் இருமுறையும், கடந்த 8ம் தேதியும் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்து பல மணி நேரம் தமிழகம்- கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் அதிகாலை செட்டி நொடி என்ற இடத்தில் பாறைகள் சரிந்து விழுந்து சுமார் 14 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சீரமைப்பு பணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கிய நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ஐந்தாவது முறையாக நேற்று முன்தினம் பாறைகள் சரிந்து விழுந்த இடத்திற்கு அருகே சுமார் 50 அடி நீளத்திற்கு சாலை பெயர்ந்து பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மலைப்பாதையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் ஒரு மணி நேரம் காத்திருந்து, மேலும் மண்சரிவு ஏற்படாததன் காரணமாக அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து, சிறிய சரக்கு வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். பேருந்து போக்குவரத்திற்கு முற்றிலும் தடை விதித்தனர். பல்வேறு இடங்களில் சிறிய சிறிய பாறைகளும் மரங்களும் சாலையில் விழுந்து கிடக்கின்றன. தொடர்ந்து பர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டு வருவதன் காரணமாக பர்கூர் மலைக்கிராம மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். தற்போது சாலை சீர் செய்யப்படும் வரை பேருந்து போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் மலைகிராம மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து சாலையை சீர் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பர்கூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: தமிழக – கர்நாடக போக்குவரத்து 14 மணி நேரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Landslide ,hill ,Tamil Nadu-Karnataka ,Andiyur ,Tamil Nadu ,Karnataka ,Barkur hill road ,Dinakaran ,
× RELATED பழநி மலைக் கோயிலில் தடையை மீறி செல்போனில் பேசிய அண்ணாமலை