×

ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு

 

ஊட்டி, நவ. 4: நீலகிாி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட எல்க்ஹில், குமரன் நகர் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நடைபாதையில் வழிந்தோடுகிறது. இதனால் நடைபாதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் தெருவிளக்குகளும் முறையாக எரிவதில்லை. நடைபாதையில் முட்புதர்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது. இப்பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. அனைத்து வீடுகளிலும் கழிப்பிடம் உள்ள நிலையில் அந்த பொது கழிப்பிடம் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

எனவே இதனை அகற்றி விட்டு அங்கு சமுதாய கூடம் கட்டி தர வேண்டும். பழுதடைந்த கால்வாயை சரி செய்ய வேண்டும். துவக்கப்பள்ளியின் ஒரு பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தின் மேற்கூரை பழுதடைந்து காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. எனவே, அதே பகுதியில் வேறு இடத்தை தேர்வு செய்து புதிய மையம் கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகராட்சியிடம் பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எல்க்ஹில் குமரன் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நேற்று நடந்தது. மாதர் சங்க ஊட்டி தாலுகா தலைவர் பானுமதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆதிரா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

The post ஊட்டி நகராட்சி அலுவலகம் முன்பு மாதர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Matar Sangam ,Ooty Municipal Office ,Ooty ,Elkhill, Kumaran Nagar ,Ooty Municipality, Nilgai District ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...