×

தொடக்கப்பள்ளி கட்டிடப்பணி மீண்டும் தொடங்கியது

 

அரவக்குறிச்சி, நவ. 4: தினகரன் செய்தி எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கியது.அரவக்குறிச்சி அடுத்த கொத்தப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.இந்நிலையில் கடந்த 3 மாதமாக கட்டிடப் பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. முன்பக்கம் இருந்த பள்ளி கழிப்பறையும் இடிக்கப்பட்டது. இதனால் தற்போது பள்ளி மாணவ மாணவிகள் சிறுநீர் கழிக்க பொது இடத்தில் அல்லது பள்ளி அருகில் உள்ள அமராவதி ஆற்றின் அணை பகுதிக்கு செல்ல வேண்டிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இப்பகுதியில் படிக்கும் மாணவ மாணவிகள் தினமும் மிகவும் சிரமத்துடன் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

பள்ளியில் கட்டிட பொருள்கள் , கம்பிகள், கற்கள் என அனைத்தையும் அப்படியே போடப்பட்டு உள்ளது. தினம் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் இதையெல்லாம் தாண்டித்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகம், கொத்தப்பாளையத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்திருந்ததனர். இதுகுறித்து நவ 1ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியாக பள்ளியின் கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கியதையடுத்து மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

The post தொடக்கப்பள்ளி கட்டிடப்பணி மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Panchayat Union Primary School ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’...