×

ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது

சென்னை: சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டு அறிவித்த திட்டமான ரூ.1000 கோடி மதிப்பீட்டில் “வடசென்னை வளர்ச்சித் திட்டம்” குறித்து சம்மந்தப்பட்ட துறை அரசு செயலாளர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், அறநிலையத் துறை அமைச்சரும் மற்றும் சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வடசென்னை பகுதிகளில் கழிவு நீர் அடைப்பு, குடிநீரில் கழிவுநீர் கலப்பது போன்றவற்றை சீரான முறையில் மேம்படுத்துவதும், நல்ல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, பூங்காக்கள் பராமரிப்பு, உடற்பயிற்சி கூடங்கள் பராமரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மயான பூமிகள் பராமரிப்பு, பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாடு, கல்லூரிகளில் கட்டமைப்பு மேம்பாடு, தடையில்லா மின்சாரம், மழைநீர் கால்வாய் பணிகள், புறநகர் மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் மீனவர் பகுதியில் வாழ்கின்ற மக்களுடைய வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலைச் சார்ந்த அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்குதல் போன்றவை குறித்தும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனை அமைப்பது, போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான மறுவாழ்வு மையம் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவமனை உருவாக்குதல், டயாலிசிஸ் சென்டர் அமைத்தல் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என்றார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை செயலாளர் அமுதா, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் (போக்குவரத்து) சுதாகர், (வடக்கு) ஆஸ்ரா கர்க் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : North Chennai Development Project Review ,Minister ,Shekhar Babu ,Chennai ,Development Project ,Assembly ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்...