×

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 கோடியுடன் தலைமறைவானவர் லாரி மோதி இறந்ததால் பரபரப்பு: பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை

சென்னை: சைதாப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (45). அதே பகுதியில் பெரிய அளவில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களிடம் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டுகள் நடத்தி வந்தார். இந்த தீபாவளிக்கு ரூ.10 கோடி வரை பொதுமக்கள் கணேசனிடம் சீட்டி கட்டியதாக கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், சீட்டு கட்டியவர்கள் அதற்கான முதிர்வு தொகையை கேட்டு வந்துள்ளனர்.

ஆனால், பணத்தை கொடுக்காமல், அவர் சில தினங்களுக்கு முன்பு தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் வியாபாரி கணேசன் மீது புகார் அளித்தனர். அதன்படி, மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த வியாபாரி கணேசன், நேற்று முன்தினம் அதிகாலை வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்தபோது, லாரி மோதி உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கணேசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கணேசன் உயிரிழந்த தகவலறிந்து, அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கணேசன் வீடு மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இருந்தாலும், கணேசன் வீட்டின் அருகே பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியுள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post தீபாவளி சீட்டு நடத்தி ரூ.10 கோடியுடன் தலைமறைவானவர் லாரி மோதி இறந்ததால் பரபரப்பு: பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Diwali Lottery ,Riots ,CHENNAI ,Ganesan ,Saidappettai Pilliyar Koil Street ,Diwali ,
× RELATED உத்தப்புரம் கலவரத்தில் பாதித்த 302 பேருக்கு நிவாரணம் கோரி மனு