×

6ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை, நவ. 4: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியதில் இருந்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் நவ.3 முதல் 6ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று சென்று, வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருவதை உறுதி செய்தார். செல்போன் மூலம் வழங்கப்படும் எச்சரிக்கை குறித்தும், கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அமைப்புகள் வாயிலாக எச்சரிக்கை செய்திகள் ஒலிபரப்பப்படுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது பற்றி கேட்டறிந்தார்.

The post 6ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,North East ,Monsoon ,Tamil Nadu ,
× RELATED கள்ளச்சாராயத்தை தடுப்பது தொடர்பாக...