×

வாரத்தில் 70 மணி நேரம் வேலை சர்ச்சைக்கு ஆளான நாராயணமூர்த்தி பணி நேரம் அதிகரித்தால் பொருளாதாரம் வளருமா?

இந்தியப் பொருளாதாரம் வளர வேண்டுமென்றால், வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்’ – இது நாட்டின் பொருளாதாரத்தின் மீதான ‘அக்கறை’யுடன் இன்போசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி ‘அட்வைஸ்‘. போதாக்குறைக்கு ஜப்பான், ஜெர்மனி நாடுகளை உதாரணம் காட்டியிருக்கிறார். இவர் திருவாய் மலர்ந்தருளிய இந்த வார்த்தைகளுக்கு திக்கெட்டும் இருந்து எதிர்ப்புகள் குவியத்தொடங்கியிருக்கின்றன. சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு ஐஎல்ஓ வின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, இந்தியர்கள் சராசரியாக வாரத்துக்கு 47.7 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த பணி நேரம் அதிகம்தான். வாரத்துக்கு அதிகபட்சமாக 48 மணி நேரம் என தொழிலாளர் சட்டம் வரையறுத்துள்ளது.

காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி (பிஎல்எப்எஸ்) கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் சுயதொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் அமைப்பு சாரா துறையில் பணிபுரிவதால், வாரத்தில் எவ்வளவு மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்பதை அளவிடுவது கடினம். இருப்பினும் இப்படிப்பட்ட துறைகளில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் செய்வோரும் உள்ளனர். 2019ம் ஆண்டில், தொழிலாளர்களின் வேலை நேரம் தொடர்பாக முதன் முறையாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சுயதொழில் செய்வோர், வீட்டு வேலை, கூலி வேலை செய்பவர்கள் பலர், வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்கின்றனர் என தெரிய வந்துள்ளது. மொத்தத்தில், உலக சராசரியை விட அதிக நேரம் இந்தியர்கள் வேலை செய்தபோதும், உற்பத்தித் திறன் குறைவுதான் என்கிறது இந்த ஆய்வு முடிவு. எனவே, வேலை நேரத்துக்கும் உற்பத்தி திறனுக்கும் தொடர்பில்லை.

நாராயணமூர்த்தி கூறியது போல 2ம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பானிலும், ஜெர்மனியிலும் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்திருக்கலாம். ஆனால், அது இப்போது அல்ல. 1950களுக்குப் பிறகு பணி நேரம் உயர்ந்தது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு ஊழியருக்கு 2,030 மணி நேர பணி என்பது, அதிகபட்ச அளவாக 2,175 மணி நேரம் என 1961ல் குறுகிய காலத்துக்கு தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டது. இதுபோல் ஜெர்மனியில் சராசரியாக ஒரு ஊழியருக்கு 2,427 மணி நேரமாக இருந்தது. இதுவும் தற்போதைய இந்தியாவின் வார சராசரி பணி நேரமும் ஏறக்குறைய ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், 1950களுக்குப் பிறகு ஜெர்மனியில் பணி நேரம் குறைக்கப்பட்டு விட்டது. இதேபோல்தான் ஜப்பானிலும் 1960களுக்கு பிறகு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் சரிவை சந்தித்ததாக கூற முடியாது.

இந்தியாவில் ஊழியர்களின் சராசரி பணி நேரம் பற்றிய புள்ளி விவரம் 1970ம் ஆண்டில் இருந்து கிடைக்கிறது. அப்போது இந்தியர் ஒருவரின் சராசரி ஆண்டு பணி நேரம் 2,077 மணி நேரமாக இருந்தது. அதே ஆண்டில் ஜெர்மனியில் 1,941 மணி நேரமும், ஜப்பானில் 2,137 மணி நேரமும் பணி புரிந்தனர். எனவே 1960களில் இருந்து 80கள் வரை இந்தியாவை அதிக நேரம் தொழிலாளர்கள் பணி புரியவில்லை. என்றாலும் இந்த இடைப்பட்ட 20 ஆண்டுகளில்தான் அந்நாட்டு பொருளாதாரம் அபரிமிதமாக உயர்ந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழிற்சாலைகள் வரத் துவங்கியபோது, தொழிலாளர்களின் வாழ்க்கைதரம் உயர உயர, பணி நேரம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் படிப்படியாக இது நிகழ்ந்திருக்கிறது.

1870ம் ஆண்டில் பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 3,000 மணி நேரத்துக்கு மேல் பணி புரிந்துள்ளனர். இயந்திரமயம் ஏற்பட்டு தொழிற்சாலைகள் உருவாகாதவரை பல மணி நேரம் பணி புரிந்தால்தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது இதற்கெல்லாம் அவசியமின்றி பல நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொழில்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் உயர்வு இதெல்லாம்தான் இதற்கு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாதபோது, மிகப்பெரிய ஐடி நிறுவனத்தின் உரிமையாளரான நாராயணமூர்த்திக்கு இது தெரியாதது வியப்பாக இருக்கிறது என்கின்றனர் தொழில்துறையினர்.  நவீன தொழில்நுட்பம் அளவுக்கெல்லாம் போக வேண்டாம்.

ஒரு மீனவர் தூண்டில் மூலம் மீன் பிடித்ததற்கும், இயந்திர படகில் நடுக்கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் இது என்பதை பாமரன் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால், இது ஐடி துறையின் ஜாம்பவானாக காட்டிக் கொள்ளும் இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு புரியாதது புதிராகத்தான் உள்ளது என, ஐடி துறையினரே விமர்சிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு முடிந்தும் ஒர்க் பிரம் ஹோம் என்ற பெயரில் முடிவில்லா பணி நேரமாக, நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் ஐடி ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், நாராயண மூர்த்தி சொல்ல வரும் பொருளாதார முன்னேற்றம் என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* அதிக உற்பத்தி திறனுக்கு நீண்டநேர வேலை தேவையா?

2015ம் ஆண்டில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) தொகுத்த புள்ளி விவரங்கள், அதிக உற்பத்தித்திறனுக்கு நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என நிரூபித்துள்ளது. 38 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், வாரத்துக்கு 41.2 மணி நேரம் என்ற மிக நீண்ட சராசரி வேலை நேரம் கொண்ட மெக்ஸிகோ, தரவரிசைப்படுத்தப்பட்ட நாடுகளில் மிகக் குறைந்த உற்பத்தித்திறன் கொண்டது என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டியது. ஒரு மணி நேர வேலையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உற்பத்தித்திறன் அளவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்மாறாக, லக்சம்பர்க் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்ச உற்பத்தித்திறனைக் கொண்டிருந்தது.

இந்த நாட்டில் ஒரு வாரத்தில் சராசரி வேலை நேரம் வெறும் 29 மணிநேரம் தான். மற்றொரு அமைப்பு 195 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் மேற்கொண்ட ஆய்வில், ஒரு தொழிலாளி தனது முழு திறனுடன் உச்சபட்ச உற்பத்தி செய்வது அதிகபட்சம் 7 ஆண்டுகள்தான். இந்த தரவரிசையில் இந்தியா 158வது இடத்தில உள்ளது. முதலிடத்தில் பின்லாந்து உள்ளது. இங்கு முழு திறனுடன் உச்சபட்ச உற்பத்தியை தனி நபர் 28 ஆண்டுகளுக்கு தருகிறார். இந்த உற்பத்தியானது அமெரிக்காவில் 23 ஆண்டுகள் (தரவரிசை 27), இங்கிலாந்து 22 ஆண்டுகள் (தரவரிசை 31), சீனா 20 ஆண்டுகள் (தரவரிசை 44) என உள்ளது. இந்த ஆய்வில், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கல்வி மற்றும் சுகாதாரத்தில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

* வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்தால் என்னவாகும்?

நாராயணமூர்த்தி கூறியதுபோல் 70 மணி நேரம் வேலை செய்தால் உடல்நலம் மட்டுமின்றி மன நலமும் பாதிக்கப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர் . ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை, சரியான தூக்கம் என சமநிலைப்படுத்த வேண்டும். நீரிழிவு உள்ளிட்ட வாழ்நாள் நோயால் மருத்துவமனைக்கு வருபவர்களில் தற்போது முதியவர்களை விட இளைஞர்கள்தான் அதிகம். எந்நேரமும் கணினி, செல்போனே கதி என கிடப்பவர்கள் கழுத்து வலி, முதுகு வலி என பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அதிகப்படியான வேலை ஒருவரின் உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வாரத்தில் 70 மணி நேரம் வேலை சர்ச்சைக்கு ஆளான நாராயணமூர்த்தி பணி நேரம் அதிகரித்தால் பொருளாதாரம் வளருமா? appeared first on Dinakaran.

Tags : Narayanamoorthy ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?