புதுடெல்லி: ‘மை லார்ட்’ என்று சொல்வதை நிறுத்தினால் எனது சம்பளத்தில் பாதியை தருகிறேன் என்று வழக்கறிஞர் ஒருவரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபத்துடன் கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா, பி.எஸ்.நரசிம்ஹா அமர்வில் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் ஒருவர், ‘மை லார்ட்’, ‘லார்ட்ஷிப்’ போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, வழக்கறிஞரிடம் ‘இன்னும் எத்தனை முறை ‘மை லார்ட்’ என்று சொல்வீர்கள்? நீங்கள் இவ்வாறு அழைப்பதை நிறுத்தினால், எனது சம்பளத்தில் பாதியை உங்களுக்குத் தருகிறேன். ‘மை லார்ட்’, ‘லார்ட்ஷிப்’ என்று அழைப்பது அடிமைத்தனத்தின் அடையாளம் என்று அழைக்கிறார்கள். எனவே ‘சார்’ என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தக்கூடாது’ என்றும் கேள்வி எழுப்பினார்.
* தலைமை நீதிபதி வேதனை
உச்ச நீதிமன்றத்தில், நேற்றைய வழக்கு விசாரணை ஒன்றின் போது வழக்கறிஞர் ஒருவர் புதிய வழக்கு ஒன்றை ஒத்திவைக்கும்படி கோரிய போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “ஒரு புறம் வழக்குகளை விரைந்து பட்டியலிடவும், மறுபுறம் பட்டியலிட்ட பிறகு வழக்குகளை ஒத்திவைக்கும்படியும் கேட்டு கொள்ளப்படுகிறது. மிக மிக அத்தியாவசியம் இருந்தால் ஒழிய வழக்குகளை ஒத்திவைக்கும்படி வழக்கறிஞர்கள் கேட்க வேண்டாம். உச்ச நீதிமன்றம் வாய்தாவுக்கு மேல் வாய்தா வழங்கும் நீதிமன்றமாக மாற கூடாது. இது நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து விடும்,” என்று கூறினார்.
The post ‘மை லார்ட்’ என்பதை நிறுத்தினால் சம்பளத்தில் பாதியை தருகிறேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி கோபம் appeared first on Dinakaran.