×

‘ரன் அவுட்’டானது நெதர்லாந்து ஆப்கானிஸ்தானுக்கு 4வது வெற்றி: 5வது இடத்துக்கு முன்னேற்றம்

லக்னோ: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 34வது லீக் ஆட்டத்தில், நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட் செய்தது. பரேஸி, மேக்ஸ் ஓ தாவுத் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். பரேஸி 1 ரன் எடுத்து வெளியேற, மேக்ஸ் ஓ – ஆக்கர்மேன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது.

மேக்ஸ் ஓ 42 ரன் (40 பந்து, 9 பவுண்டரி), ஆக்கர்மேன் 29 ரன், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 0 ஆகியோர் அடுத்தடுத்து ரன் அவுட்டாக… நெதர்லாந்து திடீர் சரிவை சந்தித்தது. பாஸ் டி லீட் 3 ரன் எடுத்து முகமது நபி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில் வசம் பிடிபட்டார். நெதர்லாந்து 20.2 ஓவரில் 97 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஸுல்பிகர் 3, வான் பீக் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கடுமையாகப் போராடி அரை சதம் அடித்த சைப்ரண்ட் 58 ரன் எடுத்து (86 பந்து, 6 பவுண்டரி) ரன் அவுட்டானார்.

வாண்டெர் மெர்வ் 11, வான் மீகரன் 4 ரன்னில் பெவிலியன் திரும்ப, நெதர்லாந்து 46.3 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி பேட்ஸ்மேன்கள் 4 பேர் ரன் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. ஆர்யன் தத் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கான் பந்துவீச்சில் முகமது நபி 3, நூர் அகமது 2, முஜீப் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து அபாரமாக வென்றது.குர்பாஸ் 10 ரன், இப்ராகிம் 20 ரன், ரகமத் ஷா 52 ரன் எடுத்து (54 பந்து, 8 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தனர்.

கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி 56 ரன் (64 பந்து, 6 பவுண்டரி), அஸ்மதுல்லா உமர்ஸாய் 31 ரன்னுடன் (28 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் வேன் பீக், வாண்டெர் மெர்வ், ஸுல்பிகர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முகமது நபி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆப்கான் 7 போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது.

The post ‘ரன் அவுட்’டானது நெதர்லாந்து ஆப்கானிஸ்தானுக்கு 4வது வெற்றி: 5வது இடத்துக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Afghanistan ,Lucknow ,ICC World Cup ODI ,
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...