×

நெல்லையில் வாலிபரை கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கி முனையில் கைது : 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் முன்விரோதத்தில் வாலிபரை வீடு புகுந்து இரவில் கொலை செய்ய முயற்சித்த கோழி அருளை போலீசார் துப்பாக்கி முனையில் பெங்களூரில் கைது செய்து அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் நேற்றிரவு அடைத்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டையை சேர்ந்தவர் கோழி அருள். இவர் மீது பசுபதி பாண்டியன் உள்ளிட்டோரை கொலை செய்த வழக்கு மற்றும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்படும் கோழி அருள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக நெல்லை மாவட்டம் பாப்பாக்குடிக்கு வந்த கோழி அருள் மற்றும் அவரது கூட்டாளிகள் எதிரணியை சேர்ந்த வாலிபர் ஒருவரை (முன்விரோதத்தில்) வீடு புகுந்து கொலை செய்வதற்கு திட்டமிட்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் விசாரணை நடத்தி கோழி அருள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்தனர். இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன், கோழி அருளை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படையினர் கோழி அருள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோழி அருள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓசூருக்கு சென்ரு கோழி அருள் பதுங்கி இருந்த இடத்தை நள்ளிரவில் சுற்றி வளைத்தனர்.

அதன்பிறகு அவரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதையடுத்து கோழி அருளை பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்து நேற்று அம்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு அம்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கோழி அருளை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்றிரவு பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது வள்ளியூர், பாளை தாலுகா, சுரண்டை, முக்கூடல், பாப்பாக்குடி உட்பட பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பிடிவாரண்ட் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

The post நெல்லையில் வாலிபரை கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கி முனையில் கைது : 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் appeared first on Dinakaran.

Tags : Kozhi Arul ,Nellai ,Munvirotham ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...